(எம்.மனோசித்ரா)
மக்களதும் நாட்டினதும் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், தத்தமது தனிப்பட்ட பிரச்சனைகளிலேயே முழு அமைச்சரவையும் கவனம் செலுத்துகின்றது. பாரிய எதிர்பார்ப்புக்களுடன் புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்த மக்கள் இன்று எம்மை குறைகூறுகின்றனர். எனவே இலங்கையின் சிறந்த அரசியல் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து மீண்டும் நாட்டுக்கு சிறந்த சேவைகளை எதிர்பார்க்கின்றோம் என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றிணைந்தால் நாட்டுக்கு சிறந்த சேவையை ஆற்ற முடியும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகக் காணப்பட்டது என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்து ஆசி பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ரணில் விக்கிரமசிங்க  ஆட்சி காலத்தில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும், அவர் நாட்டுக்காக பல சேவைகளை ஆற்றியிருக்கிறார். கட்சி பேதங்கள் இன்றியே நான் இதனைத் தெரிவிக்கின்றேன். எவ்வாறிருப்பினும் தற்போது கடந்த காலத்தை புறந்தள்ளி எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்போம். இலங்கை பாராளுமன்றத்தின் மிகச் சிறந்தவொரு தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவின் மூளையும் , மஹிந்த ராஜபக்ஷவின் உடலையும் ஒன்றிணைத்தால் நாட்டுக்கு பாரிய சேவையை ஆற்ற முடியும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் காணப்பட்டது.

எவ்வாறிருப்பினும் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்திற்குச் சென்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்த மக்கள் இன்று எம்மை குறைகூறுகின்றனர்.

தற்போதுள்ள முழு அமைச்சரவையும் மக்களதும் நாட்டினதும் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், தத்தமது தனிப்பட்ட பிரச்சனைகளிலேயே கவனம் செலுத்துகின்றனர். அபயராம விகாரை நாட்டுக்கு சிறந்த சேவையாற்றிய தலைவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் ஒரு ஸ்தலமாகும். அதற்கமைய நாம் கட்சி அரசியலை விட , நபரின் சேவைக்கே முக்கியத்துவமளிக்கின்றோம் என்றார்.