(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யமுடியாது போயுள்ளதாகவும்,  எரிபொருள் விலை அதிகரிப்பினால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தை பெரும் குடும்பங்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹஸின் சபையில் தெரிவித்தார். 

உடல் உறுப்புகள் ஊனமுற்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு ஒப்பான நிலையில் இன்று அரசாங்கம் ஆட்சி செய்கின்றது. எனவே அடுத்த கட்டமாக அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், 2020 ஆம் ஆண்டுக்கான அரச கடனானது 14.8 ட்ரில்லியன் என கூறப்படுகின்றது. அதேபோல் இந்த தொகையில் 17ஆயிரம் கோடி ரூபா கைவிடப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே தரவுகளில் கூட அரசாங்கம் பொய் சொல்கின்றது என்பது வெளிப்பட்டுள்ளது. அதேபோல் எமது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட  அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணம் மறைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிலைமை எவ்வாறானது என்றால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளி போன்றதாகும். அவ்வாறான நோயாளியை கூட குணப்படுத்திவிட முடியும். ஆனால் அரசாங்கத்திற்கு உடல் உறுப்புகள் ஊனமுற்ற நிலையொன்று உருவாகியுள்ளது. அரசாங்கம் ஏற்கனவே நியூமோனியா நிலையில் தான் இருந்தது. பொருளாதார நெருக்கடி மற்றும் அரச நெருக்கடிகள் காரணமாக அரசாங்கத்தின் உடலில் ஒவ்வொரு பாகமும் ஊனமுற்று செல்கின்றது.

இன்று இலங்கை மீதான சர்வதேசத்தின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது, எமது ஆட்சிக்காலத்தில் வரி அதிகரிப்பு இருந்தாலும், மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தோம். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அத்தியாவசிய பொருட்களில் கை வைத்துள்ளது. வரிகளை குறைத்தமையே இதற்கு பிரதான காரணமாகும். பணம் அச்சடிக்க வேண்டும் என்ற ஒரே கொள்கையே இந்த அரசாங்கத்திடம் இருந்தது. 16ஆயிரத்தை 500 கோடி ரூபா அச்சடிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் பணம் இல்லை. இன்று டொலருக்கான இலங்கையின் ரூபா பெறுமதி அதிகரித்துள்ளது. இந்த நிலை ஆரோக்கியமானதல்ல. பயங்கரவாதிகளையும், அர்ஜுனன் மஹேந்திரன் போன்றவர்களையும் கைது செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு இன்று நெல் பதுக்கி வைத்துள்ள முதலாளிகளை கூட கண்டுபிடிக்க முடியாத நிலையே உள்ளது என்றார்.

எரிபொருள் விலை குறைந்த நேரத்தில் அரசாங்கத்திற்கு 25ஆயிரத்து 350 கோடி ரூபா இலாபம் கிடைத்தது. அந்தப்பணம் எங்கே? ஒரு வருடத்திற்கு மேலாக எரிபொருளில் இலாபத்தை பெற்றுக்கொண்ட அரசாங்கம் இன்று அந்த நிதியை கொள்ளையடித்துள்ளது. நாட்டின் அத்தியாவசிய பொருட்களை குறைக்கவும் அந்த பணம் பயன்படுத்தப்படவில்லை என்றால் இந்த பணம் யாருடைய பைக்கு சென்றது. விலை பட்டியலை நடைமுறைப்படுத்தியிருந்தால் இப்போது உள்ள விலையை விடவும் குறைந்த விலையில் வழங்கியிருக்க முடியும்.

மேலும், நாடு திறக்கப்பட்டவுடன் ஆண்கள் வேணுமென்றால் மதுபானசாலைகளுக்கு முன்னால் நின்றிருக்க முடியும், ஆனால் பெண்கள் அனைவரும் அடக்குக்கடை முன்னாலேயே நின்றனர். ஆகவே மக்களின் நெருக்கடி நிலையை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று மக்கள் வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆகவே இவ்வாறான ஆட்சியை கொண்டு செல்ல அரசாங்கம் எதற்கு. உடனடியாக அரசாங்கம் இராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும் என்றார்.