மலையக தேசிய காங்கிரஸ் என்ற புதிய அரசியல் கட்சி உதயம்

By T Yuwaraj

24 Jun, 2021 | 11:43 AM
image

மலையகத்தின் மாற்றத்திற்காகவும் பொறுப்பான வளர்ச்சிக்காகவும் மாபெரும் முயற்சியாக மலையக தேசிய காங்கிரஸ் எனும் அரசியல் கட்சி  உருவாக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நான்கு கரங்களால் காக்கப்படும் உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறள் நூலை தமது சின்னமாகவும், அறிவு, செல்வம், அமைதி, கண்ணியம், பக்தி, பெருமை ஆகிய நற்குணங்களையெல்லாம் அடையாளப்படுத்தக்கூடிய ஊதா நிறத்தை தமது கட்சிக்கொடியின் நிறமாகவும், சின்னத்தின் நிறமாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. 

மேலும், மக்கள் சேவைக்கான அரசியலும், அதற்கான வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு, வாரிசு, சாதியம், பொருளாதார பின்னணி என்பனவற்றின் அடிப்படையில் தொழில்ரீதியான அரசியலுக்கான வாய்ப்புக்களை பெரும்பாலும்  மலையக கட்சிகள் வழங்கிவருகின்றன. 

இவ்வாறான சூழலில், அரசியல் தளத்தில் மக்களுக்காக  சேவையாற்ற விரும்பும் மலையக இளைஞர் யுவதிகளுக்கான வாய்ப்புக்கள் எட்டாக்கனியாகியுள்ள நிலையில் தமது சமூகத்தின் மீது தீராத பற்றும் அக்கறையும் கொண்ட எமது இளைஞர் யுவதிகளுக்காக பத்தொன்பது முதன்மைக் கொள்கைகளுடன் ஒரு சமத்துவமான, பாராபட்சமற்ற தளமாகவும், கட்டுக்கோப்பான பாசறையாகவும் இக்கட்சி  உருவாக்கப்பட்டுள்ளதாக மலையக தேசிய காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

மலையக தேசிய காங்கிரஸின் பத்தொன்பது முதன்மைக் கொள்கைகள் பின்வருமாறு,

01. இலங்கை வாழ் இந்திய சமூகத்தின் மீட்சியே மலையக தேசிய காங்கிரஸின் இலட்சியம்! எமது சமூகத்தின் மாற்றத்திற்காகவும், பொறுப்பான வளர்ச்சிக்காகவும் உழைப்போம்.

02. இலங்கை முழுவதும் பரந்து வாழ்கின்ற இந்திய வம்சாவழி தமிழர்களை ஒன்றிணைக்கவும், இந்திய வம்சாவளி தமிழர்கள் கௌரவத்துடன் வாழவும் ஏதுவான சூழ்நிலைகள் உருவாக வழிசெய்வோம்.

03. கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் என சகல கோணங்களிலும் எமது சமூகம் முன்னேறத் தேவையான, மேற்கொள்ளவேண்டிய சகல நடவடிக்கைகளையும் முதன்மையான பணியாக கருதி முன்னெடுப்போம்.

04. எமது மக்களிடத்தில் உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தும் சகல விடயங்களையும் எதிர்ப்போம்.

05. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்குவோம். மக்களிடம் இருக்கின்ற குறைந்தபட்ச வளங்களை பயன்படுத்தி  பொருளாதார ரீதியாக எமது சமூகம் முன்னேறக்கூடிய வழிமுறைகள் மக்களுக்கு பரிந்துரை செய்யும் அதேவேளை சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிப்போம்.

06. எமது மக்களும் அரச தொழில் வாய்ப்புகளை ஏனைய சமூகங்களுக்கு  இணையான அளவில் பெற்றிடச்செய்வோம்.

07. தனிவீடு, நிலமற்றிருக்கும் மக்களுக்காக வீடோ, நிலமோ கிடைக்க தேவையான முயற்சிகளை செய்வோம்.

08. எமது மக்கள் வாழும் பிரதேசங்களில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், இயற்கை அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்கவும் வழிவகைகளை செய்வோம்.

09. சாதி ஆதிக்கத்தை ஒழிப்போம்! சமத்துவமாய் வாழ வழிவகை செய்வோம்! சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து ஒரே சமூகமாய் ஒன்றிணைய உழைப்போம்!

10. எமது மக்கள் வாழும் பிரதேசங்களில் நீதி நிர்வாகம் அரசியல் தலையீடு அற்றதாய், கையூட்டு ஊழலற்றதாய் இருக்க வழிசெய்வோம்.

11. மருத்துவ வசதி அளிப்பது அடிப்படை உரிமை! எமது மக்களுக்கும் அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கச் செய்வோம்!

13. எமது சமூகம் சார்ந்த பாரம்பரிய கலைகளுக்கு முன்னுரிமை அளிப்போம்.

14. தொழிற்சங்கங்களை சார்ந்த தொழிலாளர், தொழிற்சங்கங்களை சாரா தொழிலாளர் வேறுபாடு அகற்றி வாழ்வுரிமையை நிலைநாட்டுவோம்!

15. எமது அரசியல் அமைப்பில் சட்டவிரோதமான தொழில்கள், சமூகவிரோத செயற்பாடுகள் மற்றும் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை மற்றும் பற்று இல்லாத எந்தவொரு நபருக்கும் எந்த பொறுப்புகளையும் வழங்கமாட்டோம்.

16. வாக்கு அடிப்படையிலான அரசியல் அல்லாமல் எமது சமூகத்தின் மாற்றத்தையும், பொறுப்பான வளர்ச்சியையும் அடிப்படையாகக்கொண்ட அரசியலை முன்னெடுப்போம்.

17. எமது அரசியல் பயணத்தில் மக்கள் பிரதிநிதியாக எமது உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படும் போது அவர்களின் மாதாந்த ஊதியத்தில் குறைந்த பட்சம் இருபத்தைந்து  வீதத்தையாவது மக்கள் பணிக்காக வழங்கவேண்டும் என்பதை விதியாக கடைப்பிடிப்போம்.

18. தொழில் ரீதியான அரசியலை மேற்கொள்ள எமது அரசியல் அமைப்பில் சந்தர்ப்பத்தை வழங்கமாட்டோம்.

19. எமது அரசியல் அமைப்பு சார்ந்த அனைந்து விடயங்களிலும் மகளிருக்குச் சமபங்கு அளிப்பது, அவர்களுக்கு சம உரிமை கிடைத்திட வழிசெய்வோம்.

No description available.

இந்தக் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக திரு. சிவன் ரவிசங்கர் அவர்கள் பொறுப்பேற்றுள்ளதுடன் திட்ட ஒருங்கிணைப்பாளராக திரு. சுப்பையா வசந்தராஜ் அவர்களும், மக்கள் தொடர்பாளர்களாக திருமதி ரேகா ராஜேந்திரன் அவர்களும், செல்வன் நாகேந்திரன் சன்லோபன் அவர்களும், ஊடக ஒருங்கிணைப்பாளராக ஆதிசிவம் அஜந்தன் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

மலையக தேசிய காங்கிரஸ், இலங்கைவாழ் இந்திய வம்சாவழி மக்களின் ஆரம்பகால அரசியல் தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் விளங்கிய உன்னதமான பெருந்தலைவர்களான மரியாதைக்குரிய அமரர் கோதண்டராமய்யர் நடேசய்யர் மற்றும் மரியாதைக்குரிய அமரர் காளிமுத்து இராஜலிங்கம் ஆகியோர் விட்டுச்சென்ற அரசியல் வெற்றிடத்தை, அவர்கள் வழிநிற்கும் மலையக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மூலம் நிரப்புவதன் மூலம் விடியலின் முரசாக ஒலிக்கும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்