(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது. கொவிட்-19 வைரஸ் பரலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டினால் நாட்டு மக்கள் நாளாந்தம் பெரும்  நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளார்கள். அரசாங்கத்திற்கு எதிராக  நாட்டு மக்கள் விரைவில் வீதிக்கிறங்கி போராடுவார்கள்  என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.

   நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த  அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 பாரிய எதிர்பார்ப்பின் மத்தியில் நாட்டு மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். தேசியம் மற்றும்  நாட்டு மக்களின்  நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம்   செயற்படும் என்று எதிர்பார்த்தே அரசாங்கத்திற்கு ஆதரவு  வழங்கினோம். தேர்தல் காலத்தில் நாட்டு மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்திய கொள்கைக்கு முரணாகவே அரசாங்கம் தற்போது செயற்படுகிறது. ஆகவே அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை முழுமையாக இல்லாதொழிந்து விட்டது.

 கொவிட்-19  வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முறையற்ற வகையில் முன்னெடுக்கப்படுகிறன. எவர் தலைமையில்  இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது என்பதில் போட்டித்தன்மை காணப்படுவதால் இறுதியில் பொறுப்பு கூறுபவர்கள் எவருமில்லை. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளின் பொறுப்பை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும் என ஆரம்பத்தில்  இருந்து தெரிவித்தோம். அவர் இவ்விடயத்தில் மௌனம் காப்பது நெருக்கடிகளை தீவிரப்படுத்துமே தவிர  சீர் செய்யாது.

 அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டினால் நாட்டு மக்கள்  பொருளாதார ரீதியிலும், உளவியல் ரீதியிலும்  பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  கொவிட் -19 பிரச்சினை,  கப்பல்  தீ  விபத்து பிரச்சினை, எரிபொருள் விலையேற்றம் , உர பற்றாக்குறை என  பலதரப்பட்ட பிரச்சினைகளை நடுத்தர மக்கள் எதிர்க் கொண்டுள்ளார்கள். இப்பிரச்சினைகளுக்கு  இதுவரையில் உரிய தீர்வு முன்வைக்கப்படவில்லை.

  விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை இலவசமாக வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் நிர்வாகத்தில் அதிக விலைக்கு கூட உரத்தை பெற்றுக் கொள்ள முடியாத நெருக்கடி நிலைக்கு விவசாயிகள்  தள்ளப்பட்டுள்ளார்கள். இரசாயன உர பாவனையை தடை செய்யும் திட்டத்தை  வரவேற்கிறோம். ஆனால் அதற்கு ஆரம்பத்தில்  ஒரு சிறந்த திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தியிருக்க வேண்டும்.

 விவசாயிகள்  தங்களின் வயல் நிலங்களில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். ஆகவே இவர்களை வீதிக்கு இறக்கும் செயற்பாட்டை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். இல்லாவிடின் அரசாங்கத்திற்கு எதிராக நாமும் வீதிக்கு இறங்கி போராட நேரிடும் என்றார்.