மண் அகழ்வு நடவடிக்கைகளிலிருந்து சூழலை பாதுகாப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர்  திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று 23/06/2021 காலை 10 மணிக்கு இடம்பெற்றது. 

இக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட உதவிச் செயலாளர், மருதங்கேணி பிரதேச செயலாளர், வன ஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாகர்கோயில் குடாரப்பு பிரதேசங்களில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் மண் விநியோகத்தை கட்டுப்படுத்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள பாடசாலை மற்றும் வழிபாட்டு தலங்களை பயன்பாட்டிற்கு  விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலாளர் ஊடாக மேற்கொள்ள உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அத்துடன், சூழலுக்கு பாதிப்பற்ற வகையில் அன்றாட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான மண் தேவையை பெற்றுக்கொள்ள வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன வளதிணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் ஒரு பொதுவான இடத்தினை தெரிவு செய்ய ஆலோசனை வழங்கப்பட்டதுடன் குறித்த பிரதேசத்தை தினமும் கண்காணித்து உரிய அதிகாரிகளை அறிக்கையிடுமாறும் ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தின் மேய்ச்சல் தரைகளுக்கான புதிய பிரதேசத்தை தெரிவு செய்ய அறிவுறுத்தப்பட்டதுடன் அப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான மேலதிக நிதி ஒதுக்கீட்டினைபெற்றுத்தர ஏற்பாடுகளை மேற்கொள்ளவதாகவும் கௌரவ ஆளுநரால் தெரிவிக்கப்பட்டது.