பாகிஸ்தான், லாகூரின் ஜோஹர் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக ஜியோ செய்திச் சேவை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மீட்பு படை, காவல்துறை மற்றும் வெடிகுண்டு அகற்றும் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் நகரின் ஜின்னா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெடி குண்டு விபத்து ஏற்பட்ட வீட்டை அண்மித்துள்ள கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் சிதைவடைந்திருந்ததை சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகள் வெளிப்படுத்தின.

கட்டிடங்களில் ஒன்று கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதை அது காட்டியது.

ஜின்னா வைத்தியசாலை நிர்வாகம் மக்கள் முன் வந்து காயமடைந்தவர்களுக்கு இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது, 

மேலும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும் வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

காயமடைந்தவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரி, ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

குறித்த பகுதியூடான போக்குவரத்துகள் திருப்பி விடப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பொலிசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்துள்ளனர்.