(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)
சமையல் எரிவாயுவின் விலையை ஒரு சதத்தால்கூட அதிகரிக்கப்போவதில்லை. அத்துடன் 12.5 கிலோ எரிவாயு அனைத்து எரிவாயு நிலையங்களிலும் இருக்க வேண்டுமென்பது அரசாங்கத்தின் தீர்மானமாகும். அதனால்  எரிவாயு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியை பின்பற்றாத வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புதிய எரிவாயுவை (12.5 கிலோ நிறை) சந்தைக்கு அறிமுகம் செய்ய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஒருபோதும் அனுமதியளிக்கவில்லை. என்றாலும் குறித்த நிறுவனத்திற்கு புதிய வகையான எரிவாயு ஒன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு நிறுவனமாக அவர்கள் செயற்பட்டு புத்தாக்கமான ஒரு எரிவாயுவைதான் அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.

ஆனால், இவ்விடயத்தில் அநுரகுமார திஸாநாயக்க கூறுவது போன்று, நடந்துள்ள அநீதிகளை ஏற்றுக்கொள்கிறேன். இதன்மூலம் நுகர்வோரை ஏமாற்றியுள்ளனர். நுர்வோருக்கு தீர்மானம் எடுக்க முடியாத நிலை உள்ளது. எமது அமைச்சின் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, இந்த புதிய அறிமுகம் தொடர்பில் ஆய்வொன்றை நடத்தியுள்ளார். இதனை அவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்.

அத்துடன் 12.5 எரிவாயு சிலிண்டருக்கு சந்தையில் தட்டுப்பாடு உள்ளதென்பதை நாம் நடத்திய ஆய்வில் ஏற்றுக்கொள்கிறோம். அதிவிசேட வர்த்தமானி ஊடாக அனைத்து எரிவாயு நிரப்பும் நிலையங்களிலும் 12.5 கிலோ எரிவாயு இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். இந்த விதிமுறைகளுக்கு எதிராக செயற்படும் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் கூறியுள்ளோம். லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு எதிராக நுகர்வொர் பாதுகாப்பு அதிகாரசபையினால் வழக்கொன்றும்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொவிட் தொற்று காரணமாக உலகப் போக்குவரவத்து பாதிக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகளாவிய நெருக்கடியாகும். என்றாலும் நாம் மக்கள் பக்கமிருந்துதான் அனைத்து தீர்மானங்களையும் எடுக்கிறோம். எரிவாயு விலை கட்டுப்பாடற்ற நிலையில் அதிகரிக்கப்பட்டால் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதென ஜனாதிபதி கூறினார். தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் 250 ரூபாவால் கடந்த அரசாங்கம் கேஸ் விலையை குறைத்திருந்தது. அதனால் தற்போதைய சூழலில் எரிவாயு விலையை அதிகரிக்குமாறு கோருவதில் நியாயம் உள்ளது.

அத்துடன், லிட்ரோ மற்றும் லாப் என இரண்டு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எரிவாயுக்கான அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளன என்றார்.