ரொபட் அன்டனி 

'' ஐந்து தடவைகள் பிரதமர் பதவி, 20 வருடங்களுக்கு மேலாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி, 17 வருடங்கள் அமைச்சுப்பதவி, 43 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி, 28 வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுடன் ரணில் விக்கிரமசிங்க இன்று முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் பிறந்த தினமான ஜூன் மாதம் 23ஆம் திகதி இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்"

ஆண்டு  2003,  ஒக்டோபர் மாதத்தில்  ஒருநாள் நேரம் மாலை 3 மணியிருக்கும். அமெரிக்காவின் வொஷிங்டனில் அமைந்துள்ள வெள்ளைமாளிகை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷை சந்திப்பதற்காக அப்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடைய உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார். ஜோஜ்.டபிள்யூ. புஷ்ஷை சந்திப்பதற்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஒரு தகவல் கிடைக்கிறது. 

அதாவது இலங்கையில் அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா குமாரதுங்க ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு, உள்துறை அமைச்சு, மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களை கைப்பற்றிவிட்டதாக அந்த தகவல் கூறுகிறது. தகவலைப் பெற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க பதற்றமடையவில்லை. ஆஹ், அப்படியா? என்று கேட்டுவிட்டு அடுத்த சில நிமிடங்களில் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். டபிள்யூ. புஷ்ஷை சந்தித்து சுமார் அரை மணிநேரம் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்த சம்பவத்தை தற்போது நினைவுகூருவதற்கு முக்கியமான நாளாக இன்றைய தினம் அமைகின்றது. ஐந்து தடவைகள் பிரதமர் பதவி, 20 வருடங்களுக்கு மேலாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி, 17 வருடங்கள் அமைச்சுப்பதவி, 43 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி, 28 வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவி உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை இலங்கையின் பாராளுமன்றத்தில் நிகழ்த்தியிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜூன் மாதம் 23ஆம் திகதி இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். 

இன்றையதினம் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள இந்த சம்பவத்தின் பின்னணியில் வடுக்கள், அனுபவங்கள், காய்நகர்த்தல்கள், இராஜதந்திர நகர்வுகள் என பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. 

நெருக்கடிமிக்க காலகட்டம் 

நாடாக இன்றைய நிலையில் இலங்கையானது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்திருக்கின்ற நிலையில் பாராளுமன்றத்தில் மிக முக்கியமான அனுபவத்தை கொண்டிருக்கின்ற நாட்டை பலமுறை நிர்வகித்த ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக இன்று பொறுப்பேற்கிறார். இம்முறை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை அவர் பயன்படுத்தி பாராளுமன்றம் வருகிறார். இந்நிலையில் அடுத்த நான்கு வருட காலத்தில் என்ன செய்யப்போகிறார்? எவ்வாறு தனது கட்சியை மீளக் கட்டியெழுப்பபோகிறார்? மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறைந்த ஒரு கட்சியாக அவரால் கட்டி எழுப்ப முடியுமா? இந்த நான்கு வருட காலப்பகுதிக்குள் அவரினால் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக முடியுமா? என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் அவர் மீது காணப்படுகின்றன. இவ்வாறான பல்வேறு எதிர்பார்ப்புக்களை சுமந்து வண்ணமே மீண்டும் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதாக அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இன்றையதினம் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதிலும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் காணப்படுகின்றன. முக்கியமாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பிறந்த தினம் இன்றாகும். 1977 ஆம் ஆண்டு முதல் முதலாக பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு ரணில் சென்றபோது அப்போது ரணசிங்க பிரேமதாச சபை முதல்வராக செயற்பட்டிருந்தார். அதன்பின்னர் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாகியதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை சபை முதல்வராக நியமித்தார். அதேபோன்று இன்று ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு செல்லும்போது ரணசிங்க பிரேமதாசவின் புதல்வரான சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார். அத்துடன் ரணில் விக்ரமசிங்கவின் பாடசாலை வகுப்புத் தோழனான வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று சபை முதல்வராக இருக்கின்றார். 

ரணிலின் அரசியல் 

1993 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மறைவின் பின்னர் டி.பி. விஜயதுங்க இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அப்போது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க 1993 ஆம் ஆண்டு மே மாதம் ஏழாம் திகதி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். 44 வயதில் இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்படுகிறார். அதன்பின்னர் தொடர்ந்து அவர் வெற்றிநடை போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட பல சவால்களை எதிர்கொண்டே அவர் பயணிக்க வேண்டியேற்பட்டது. 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்கவை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவினால் களமிறங்க முடியவில்லை. கட்சியின் சார்பில் காமினி திசாநாயக்கவே அதில் போட்டியிட்டார். அதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார். 1994 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் பல்வேறு அரசியல் வகிபாகங்களை ரணில் விக்ரமசிங்க வகித்து வந்திருக்கின்றார். 

 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு சந்திரிகாவிடம் தோல்வி அடைந்தார். தொடர்ந்து 2000 ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் தோல்வி ஏற்பட்டது. 2001 ஆம் ஆண்டு ஒரு வருட காலப்பகுதியில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு பாராளுமன்ற தேர்தல் நடத்தும் சூழலை நாட்டில் ரணில் ஏற்படுத்தினார். 2001 ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றது. மீண்டும் இரண்டாவது தடவையாக பிரதமராகிய ரணிலின் ஆட்சி 2001ஆம் ஆண்டிலிருந்து 2004ஆம் ஆண்டுவரை நாட்டில் காணப்பட்டது. 

எனினும் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த சுதந்திரக் கட்சியின் தலைவியான சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தார். இக்காலப்பகுதியில் ரணில் புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கையை மேற்கொண்டு ஆறுசுற்று சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். இவரது காலத்தில்தான் ஒஸ்லோ பிரகடனம் வெளியிடப்பட்டது. அதாவது இலங்கை அரசாங்கமும் புலிகள் தரப்பினரும் ஒரு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு திட்டத்தை எட்டுவதற்கு இணக்கம் தெரிவித்தனர். 

ஆயினும் 2004ஆம் ஆண்டு சந்திரிகாவினால் ரணிலின் அரசாங்கம் கலைக்கப்பட்டது. அதனையடுத்து மீண்டும் ரணில் எதிர்க்கட்சித் தலைவராகினார். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஷ போட்டியிட்டார். இறுதியில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். அதனையடுத்து 2005ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டுவரை ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராகவே பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியேற்பட்டது. 

இடையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள், ஜனாதிபதி தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல், என பலவற்றிலும் தோல்வியே ஏற்பட்டது. இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்த ரணிலின் தலைமைப் பதவிக்கு பல்வேறு சவால்கள் ஏற்படுத்தப்பட்டன. சஜித் பிரேமதாசவை கட்சியின் தலைவராக்குவதற்கான முயற்சிகள் பாரியளவில் இடம்பெற்றன. 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் தான் போட்டியிடாமல் அப்போது யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை கட்சியின் சார்பில் தேர்தலில் களமிறக்கினார். 

எனினும் அந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றார். 2015 ஆம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க போட்டியிடவில்லை. மாறாக சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை களமிறக்கினார். அந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார். அதனையடுத்து மீண்டும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவுசெய்யப்படும்போது 44 உறுப்பினர்கள் மட்டுமே கட்சியில் இருந்தனர் என்பது முக்கியமான விடயமாகும்.

 அதன்பின்னர் ரணில் விக்ரமசிங்க - மைத்திரிபால சிறிசேன ஆட்சி ஆரம்பித்தது, அப்போதுகூட அவர் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. பல்வேறு முரண்பாடுகள் இருவருக்கும் இடையில் ஏற்பட்டன. அதிகார முரண்பாடுகளும் தோற்றம் பெற்றன. 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி திடீரென மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்கயை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். சுமார் இரண்டு மாதகாலம் நீதித்துறை ஊடாக போராடிய ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட முயற்சித்தபோது பிரதித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயற்சித்தார். கட்சியிலும் அதிகளவானோர் சஜித்துக்கு ஆதரவு வழங்கினர். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சஜித் போட்டியிட்டார். ஆனால் எதிர்க்கட்சியில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றார். 

இந்தநிலையிலேயே அடுத்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி தயாரானபோது சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக்க வேண்டும் என கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது. அதனையடுத்து முரண்பாடுகள் தோற்றம்பெற்றன. தொடர்ந்து கட்சி இரண்டாக பிளவடைந்தது. ஐக்கிய தேசிய கட்சி ரணில் தலைமையில் போட்டியிட்டது. சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி போட்டியிட்டு பாராளுமன்ற தேர்தலில் 54 உறுப்பினர்களை பெற்றது. ஐக்கிய தேசிய கட்சி ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை மட்டுமே பெற்றது. முக்கியமாக கொழும்பு மாவட்டத்தில் கடந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தார். இந்நிலையில் கிடைக்கப்பெற்ற ஒரேயொரு தேசிய பட்டியல் எம்.பி. பதவிக்கே இன்றைய தினம் ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கிறார். 

ரணில் முன்னுள்ள சவால்கள் 

இந்நிலையில் இப்போது ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. முக்கியமாக அவர் பாரியதொரு மாற்றத்தை இக்காலப்பகுதியில் ஏற்படுத்துவார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சிக்கவில்லை என்றும் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என்று கருதுவது முட்டாள்தனமானது என்றும் யதார்த்தமான ரீதியில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டிருக்கின்றார். 

ஐக்கிய தேசியக் கட்சியை கட்டி எழுப்புவேன், மக்களுக்காக குரல் கொடுப்பேன், கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் சவால்களை எதிர்கொள்ள எனது பரிந்துரைகளை முன்வைப்பேன் என்று விக்கிரமசிங்க கூறிவருகிறார். 

விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராகியதும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கின்ற பல உறுப்பினர்கள் அவருடன் இணைந்து செயல்படுவார்கள் என்றும் அவர் எதிர் கட்சித் தலைவர் பதவிக்கு முயற்சிப்பார் என்றும் பல கருத்துக்கள் கூறப்படுகின்றன. அவ்வாறான கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவருக்கு ஆதரவு வழங்கும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. 

எனினும் இந்த விடயங்களை விக்கிரமசிங்க மறுத்திருக்கிறார். தான் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் செயற்படுவதற்கே பாராளுமன்றம் வருவதாகவும் தான் ஆரம்பத்தில் பாராளுமன்றம்வர எதிர்பார்க்கவில்லை என்றும் எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பாராளுமன்றத்தில் இடம்பெற தீர்மானித்ததாகவும் ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.

ஆனால் உண்மையில் அவர் முன் பாரியதொரு பொறுப்பும் வகிபாகமும் தற்போது காணப்படுகின்றன. காரணம் இந்த நாட்டில் பல தடவைகள் பிரதமராகவும் அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். தெற்காசியாவிலேயே சிறந்த அரசியல் அனுபவமிக்கவராக இவர் கருதப்படுகிறார். கொரோனாவில் சிக்கியுள்ள இந்த நாடு மீண்டுவருவதற்கு அவர் தனது பங்களிப்பை வழங்க முடியும். முக்கியமாக தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கான ஒரு பங்களிப்பை வழங்க முடியும். அதுமட்டுமின்றி புதிய அரசியலமைப்பு உருவாக்கம் நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. 

ஏற்கனவே ரணில் தலைமையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இந்த விடயத்தில் விக்ரமசிங்க ஒரு பங்களிப்பை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியை கௌரவமான நிலைக்கு கொண்டு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலேயே அக்கட்சி ஒரே ஒரு எம்.பி. என்ற அவல நிலைக்கு சென்றது. அக்கட்சியின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அந்த நிலைமையை மாற்றியமைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

சவால்மிக்க காலகட்டத்தில் விக்ரமசிங்க மீண்டும் பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கின்ற நிலையில் அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்ற விடயங்களை வெளியிடப் போகிறார்? எவ்வாறான பங்களிப்பை கொரோனா வைரஸ் தொற்று பரவவலிலிருந்து விடுபடுவதற்கு வழங்கப்போகிறார்? மற்றும் எவ்வாறான திட்டங்களை முன்வைக்கப்போகிறார்? என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். பொதுவாக அரசியலில் ரணில் விக்கிரமசிங்க தந்திரக்காரர் என்று கூறப்படுவதுண்டு. காய் நகர்த்தலை சிறப்பாக கையாளக் கூடியவர் என்றும் கூறப்படுவதுண்டு. எனவே அவர் எவ்வாறு அடுத்த கட்டங்கள் கையாளப்போகிறார் என்பவை முக்கியமாகவே உள்ளன.