(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்க்கட்சி காெண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அரசாங்கத்தில் இருக்கும் சிறப்பு பலம் மிக்கவர் நான்தான். அதனால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கண்டு நான் அஞ்சப்போவதில்லை. அத்துடன் கடந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் இருந்திருந்தால் எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்திருக்கும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்  நளின் பண்டார,  ஆளுங்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு தெரியாமலும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அறிவிக்காமலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருக்குமாக இருந்தால், அவ்வாறான தீர்மானத்தை எடுத்த ஜனாதிபதி, பிரதமர்,  அமைச்சரவையை விட பலம்மிக்க அந்த சக்தி யார்?“ என்பதை சபைக்கு அறிவிக்கவேண்டும் எனக் கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தைத் தனியாருக்கு ஒருபோதும் வழங்கும் எந்தவிதமானத் திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை. அவ்வாறு செய்வதற்கு நான் இடமளிக்கப்போவதும் இல்லை.

அதேபோன்று கடந்த அரசாங்கம் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அறிமுகப்படுத்தி இருந்த எரிபொருள் சூத்திரம் இருந்திருந்தால், எரிபொருள்களின் விலை பாரியளவில் அதிகரித்திருந்திருக்கும்.

அத்துடன் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தைத் தனியாருக்கு வழங்கப்போவதாக எதிர்க்கட்சி தெரிவித்து வருகின்றது. அவ்வாறான எந்த தீர்மானத்தையும் நாங்கள் எடுக்கவில்லை.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை ஒருபோதும் தனியாருக்கு வழங்க இடமளிக்க மாட்டோம். அத்துடன் எதிர்க்கட்சி எனக்கு எதிராக கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம், அரசாங்கத்தில் இருக்கும் பலம்மிக்க அந்த சக்தி நானாகவே இருக்கும்  என்றார்.