(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

எனினும் மீண்டும் இன்று புதன்கிழமை இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அசாதாரண தன்மையுடன் இனங்காணப்பட்ட மாதிரியில் டெல்டா தொற்று ஏற்பட்டுள்ளதா என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

எனினும் குறித்த மாதிரி பெறப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பில் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் , புதிய வைரஸ் இனங்காணப்பட்டால் அதற்குரிய நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சு தயாராக உள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று செவ்வாய்கிழமை மாலை 7 மணி வரை 1320 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இதுவரையில் நாட்டில் 2,43,140   பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. இவர்களில் 2,07,287 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 33,272 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.