பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. அதை விடுத்து உங்கள் அரசியல் லாபங்களுக்காக இந்த விடயத்தைப் பாவிக்காதீர்கள் என தமிழ் தேசிய  மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள முக்கிய  விடயம்...! | Virakesari.lk

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை (22.06) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்து பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

'நாமல் ராஜபக்ஷ அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தெரிவித்த கருத்துகளை வரவேற்கும் அதே நேரம், செயல்பாட்டில் ஏதும் இல்லாதவாறு வெறுமனே தத்தமது கருத்துகளை அரச தரப்பினர் எழுந்தமானமாக கூறிவிட்டு முடிப்பதை, குறிப்பாக ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கின்ற இந்த காலப்பகுதியில், ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் இப்படியாக ஏமாற்றுத்தனமான கூற்றுகளை வெறுமனே கூறுவதை தவிர்க்கவேண்டும்.

அரசியல் கைதிகள் விடயத்தில் தத்தமது விருப்பங்களுக்கிணங்க வெறுமனே கருத்துச்சொல்லிவிட்டு அமருகின்ற ஒரு விடயம் அல்ல. இங்கு உண்மையில் அடிப்படை பிரச்சினையாக இருப்பது பயங்கரவாத தடைசட்டமே. அந்த பயங்கரவாத தடைச்சட்டமே எதுவித நீதியான முறைமைகளும் இன்றி தடுத்து வைக்கின்றமை உடபட பல அநீதியான முடிவுகளுக்கு இடம் கொடுத்திருக்கிறது. அதனடிப்படையிலேயே அரசியல் கைதிகள் நீதியற்ற விதமாக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதனை முழுமையாக நீக்காமல் அல்லது அதையொத்த இன்னொரு சட்டத்தை கொண்டுவராமல் இருப்பதை உறுதி செய்யாமல்  இருந்தால் இப்படியான நெறிதவறிய முடிவுகளும் அநீதிகளும் கட்டமைக்கப்பட்ட வகையில் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே வெறுமனே பேச்சளவில் மட்டும் அரசியல் கைதிகளின் விடுதலை என கூறிக்கொண்டு காலத்தை கடத்துவதில் பயனில்லை.

இதே ராஜபக்ஷ அரசின் முந்திய ஆட்சிக் காலத்திலும் ஜி எஸ் பி வரிச்சலுகைக்கால ICCPR ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால் நடைமுறையில் அதற்கு எதிர்மாறாக, தமக்கு மாறான கருத்துடையவ்ர்களை ஒடுக்கவே அதை பாவித்திருந்தது.

இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இந்த பாராளுமன்றிலும் இதற்கு முந்திய பாராளுமன்றிலும் தமிழ்த்தரப்பினர் குரல்கொடுத்த போது அதை இங்கு இருப்பவர்கள் பலமாக எதிர்த்திருந்தனர். அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுப்பவர்களை 'புலிகள் ' என அழைத்தனர். இன்று தமிழர் தரப்பு, அரசியல் கைதிகள் தொடர்பில் கூறியவ்ற்றையே ஜி எஸ் பி பிளஸ் கேள்விக்குள்ளாகியிருக்கும் இந்த காலப்பகுதியில் நாமல் ராஜபக்ஷ கூற முற்படுகிறார்.

உண்மையில் அரசியல் கைதிகள் தொடர்பில் இருக்கும் அடிப்படைப் பிரச்சினையான பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுதலும் அதனை ஒத்த இன்னொரு அநீதியான சட்ட மூலத்தை கொண்டுவராமல் இருப்பதும்தான், அவர்களின் விடுதலைக்கான ஒரே வழி என்பதை அரசாங்கத்துக்கு இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம் எனத் தெரிவித்தார்.