(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)
பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கி அரசாங்கம் அவர்களை விவசாயத்துக்காக ஊக்கப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காணி திருத்தச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பெருந்தோட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை நீர்மாணித்துக்கொண்டு வாழ்கின்றபோதும் அதிகமானவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் இல்லை.
கடந்த அரசாங்க காலத்தில் இவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படு, அதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அந்த உறுதிப்பத்திரங்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று பெருந்தோட்டங்களில் காணப்படும் தரிசு நிலங்களை மலையக இளைஞர் யுவதிகளுக்கு வழங்குவதற்கான சிறந்த காலமாகும்.
இனவாதமற்ற அரசாங்கம் என்றால் இருக்கும் தரிசு நிலங்களை அந்த மக்களுக்கு வழங்கி விவசாய நடவடிக்கையை ஊக்குவிக்கவேண்டும்.
மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கிவிட்டு, அவர்களின் வேலை நாட்களை குறைத்திருக்கின்றது.
இவ்வாறு பெருந்தோட்ட கம்பனிகள் பெருந்தோட்ட தொழிலாளர்களை வஞ்சித்து வருவதை காண்கின்றோம். இதுதொடர்பாக பெருந்தோட்ட அமைச்சு கவனம்செலுத்தி, இந்த கம்பனிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேபோன்று கொவிட் காரணமாக மலையக மக்கள் பாரியளவில் பாதிக்கபட்டிருக்கின்றனர். அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பதற்கு இணைய வசதிகள் இல்லை.
அரசாங்கத்தினால் வழங்கப்படுவதாக தெரிவித்த 5ஆயிரம் ரூபாவும் அந்த மக்களில் பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கவில்லை.
இவ்வாறு இந்த அரசாங்கம் மலையக மக்களை புறக்கணித்து வருகின்றது. இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் சக்தியாக இருந்து வரும் மலையக மக்களின் உரிமைகளை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.