(இராஜதுரை ஹஷான்)
தனிமைப்படுத்தல் சட்டத்தை கொண்டு அரசாங்கம் பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை முடக்குகிறது. தனிமைப்படுத்தல் சட்டம் நடுத்தர மக்களிடம் கடுமையான முறையில் செயற்படுத்தப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் தனிமைப்படுத்தல் சட்டம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என முன்னிலை சோஷலிச கட்சியின் பொதுச்செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

முன்னிலை சோஷலிச கட்சியின் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்கள்  ஆகியவற்றை பயன்படுத்தி அரசாங்கம் பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை முடக்குகிறது. அரசாங்கத்திற்கு எதிராக எழும் போராட்டங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தினால் பலவந்தமான முறையில்  அடக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடு ஜனநாயக கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணானதாகும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை முறையாக முன்னெமுக்கப்படவில்லை. 5000 ஆயிரம் நிவாரணம் நிதி மீனவர்களுக்கு முழுமையாக கிடைக்கப் பெறவில்லை. நியாயத்தை பெற்றுக் கொள்ள மீனவர்கள்  முன்னெடுத்த அமைதி வழி போராட்டத்தில் பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டார்கள்.

துறைமுக நகரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்விடயம் குறித்து பல்வேறு தரப்பினருக்கும் அறிவித்தும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி, மூழ்கிக்  கொண்டிருக்கும். எம். வி. எக்பிரஷ் பேர்ள் கப்பலினால்  நாட்டின்  கடல்வளங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவில் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளன. இவை குறித்து அரசாங்கம் இதுவரையில்  உண்மை காரணியை பகிரங்கப்படுத்தவில்லை.

இந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் காராணமாக மீன்பிடி கைத்தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் பெருமளவில்  பாதிக்கப்பட்டுள்ளன. தீ விபத்துக்குள்ளான கப்பலினால் கடல் நீரில் இரசாயன பதார்த்தங்கள் கலக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவர்களிள் மீன்பிடி உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பாதிப்புக்களுக்கு தீர்வை 5000 ஆயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவின் ஊடாக மட்டுப்படுத்த முடியாது.

மறுபுறம் எரிபொருள் விலையேற்றத்தினால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தின் அனைத்து  முறையற்ற செயற்பாட்டினாலும் மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதை தவிர்த்து அரசாங்கம்  சர்வாதிகாரமான முறையில் செயற்படுகிறது.

 கொவிட்-19 வைரஸ் தனிமைப்படுத்தல் சட்டங்களை கொண்டு மக்களின் போராட்டங்களை முடக்க முடியாது. அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். கொவிட் -19  தனிமைப்படுத்தல் சட்டம் சாதாரண மக்களுக்கு மாத்திரம் கடுமையான முறையில் செயற்படுத்தப்படுகிறது என்றார்.