(எம்.மனோசித்ரா)
மேலதிக களஞ்சிப்படுத்தலுக்காவும், அரிசி மாபியாக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காகவுமே 100, 000 மெட்ரிக் தொன் சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாறாக அரிசி பற்றாக்குறை ஏற்படும் என்பதற்காக அல்ல என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது ,' நாட்டில் தற்போது உரப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இதன்  தாக்கமாக எதிர்காலத்தில் அரிசி பற்றாக்குறையும் ஏற்படும் என்பதற்காகவா 100, 000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது? ' என்று கேட்ட போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சேதன பசளைகளை தயாரித்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே உரப்பற்றாக்குறை ஏற்படும் என்று விவசாயிகள் வீண் கலவரமடையத் தேவையில்லை. இலங்கையில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அரிசி மாபியாக்கள் , நெல் தொகையை களஞ்சியப்படுத்தி வைத்துக் கொண்டு அவற்றை மொத்த விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்காமலுள்ளன. எனவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகவும், அதிகரித்துள்ள அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்குமே அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது என்றார்.

இது தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில், மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வாகவே 100, 000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தது. இலங்கையில் உரம் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. காரணம் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட உரம் போதுமானளவு காணப்படுகிறது. எனினும் இதனை விநியோகிப்பத்தில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படலாம். இந்த பிரச்சினைக்கு தீர்வினைக் காண முடியும். உரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.