இந்தியாவில் புதிய உச்சமாக நேற்று  ஒரேநாளில் 86 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளது. உலகளவில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தடுப்பூசி போடப்பட்ட முதல் நாள் இதுவாகும்.

இவ்வாறு ஒரே நாளில் இஸ்ரேலின் சனத்தொகை அல்லது நியூசிலாந்தின் இரு மடங்கு சனத்தொகைக்கு இந்தியா தடுப்பூசி போட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16 ஆம் திகதி ஆரம்பித்து நடந்து வருகின்றன.  இதன்பின்பு கடந்த மே 1 ஆம் திகதியில் இருந்து 18 வயது அடைந்த அனைவருக்கும் தடுப்பூசி போட்டு கொள்ள இந்திய மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், நாட்டில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 69 இலட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.  நேற்று 8.30 மணி நிலவரப்படி 80 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 86 இலட்சத்து 16 ஆயிரத்து 373 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன. 

இது உலகம் முழுவதும் இதுவரை போடப்பட்ட ஒரு நாள் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையில் மிக அதிகம் ஆகும் என்று தெரிவித்து உள்ளது.