(எம்.ஆர்.எம்.வசீம்)

எரிவாயு விலையை அதிகரிக்க முடியாது என வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு தீர்மானித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 640 மற்றும் 750 ரூபா என்ற அடிப்படையில் அதிகரிக்கவேண்டும் என எரிவாயு நிறுவனங்கள் இரண்டும் முன்வைத்திருந்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக அமைச்சரவை உபகுழு இன்று ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. 

இதன்போதே எரிவாயு அதிகரிப்பு மேற்கொள்ளக்கூடாது என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக உபகுழுவின் அங்கத்தவரான அமைச்சர் பந்துல குணவரத்தன தெரிவித்தார்.

எரிவாயு நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாப் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்தும் முன்வைத்து வந்தன.  டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் காஸ்விலை உயர்ந்துள்ளதை அடிப்படையாக்கொண்டே விலை அதிகரிக்க அனுமதி கோரியிருந்தன.

இவர்களின் கோரிக்கை தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள 5பேர் கொண்ட  அமைச்சரவை உபகுழு ஆராய்ந்து  எரிவாயு நிறுவன பிரதானிகளுடன் கடந்த வாரம் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமையில் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுள்ளதால் விலை அதிகரிப்பை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது. அதற்கு மாற்று ஏற்பாடுகள் இருக்குமாக இருந்தால், அதுதொடர்பில் சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை உபகுழு குழு தெரிவித்திருந்தது.

அதன் பிரகாரம் இதுதொடர்பாக  கலந்துரையாடி கடந்த வெள்ளிக்கிழமை தீர்மானம் ஒன்றுக்கு வர இருந்தபோதும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அன்றைய தினம் பேச்சுவார்த்தை  இடம்பெறவில்லை. அதனால் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக எரிவாயு நிறுவனங்கள் மற்றும் அமைச்சரவை உபகுழுவுக்கிடையிலான பேச்சுவார்த்தையை நேற்று திங்கட்கிழமைவரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் கூடிய அமைச்சரவை உபகுழு, நாட்டின் தற்போதைய நிலைமையில் எரிவாயு விலை அதிகரிக்காமல், அதுதொடர்பில் மாற்று யோசனைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளது. அத்துடன் எரிவாயு நிறுவனங்கள எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக அரசாங்கத்தினால் எரிவாயு கொண்டுவரப்பட்டு இரண்டு நிறுவனங்களுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.