கார்வண்ணன்

கொழும்புக்கு அப்பால் எரிந்துப்போன கப்பல் விவகாரத்துடன் கொழும்பு அரசியலில் பற்றிய தீ இப்போது எரிபொருள் விவகாரத்தினால் இன்னும் சுவாலை விட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. கப்பலை உள்ளே அனுமதித்தது ஏன்? ஆபத்தான கப்பல் உள்ளே வரும் வரை கண்ணை மூடிக் கொண்டிருந்தீர்களா? என்று அரசாங்கத்தைப் பார்த்து நாக்கைப் பிடுங்கிக்கொள்ளும்படி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த எதிர்க்கட்சிகளுக்கு, இப்போது எரிபொருள் விலை அதிகரிப்பு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல அமைந்திருக்கிறது.

கொரோனா தொற்றுடன், தூங்கிக் கிடந்த அரசியல் களத்தை, தட்டியெழுப்பி தங்களின் வித்தையைக் காட்டுவதற்கு, இதைவிடச் சரியான தருணம் யாருக்கும் வாய்க்காது. கிடைத்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டனவோ இல்லையோ ஆளும்கட்சிக்குள் தோன்றியிருக்கின்ற குத்துப்பாடுகள்தான் இப்போதைய அரசியல் அரங்கின் பிரதான பேசுபொருளாக மாறியிருக்கிறது.

அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைக்கமைய, அமைச்சரவையின் அங்கீகாரத்துடனேயே எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்தார். 21 மாதங்களுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட விலை உயர்வு என்ற பீடியையுடன் இதனை அறிவித்து சமாளித்து விடலாம் என்று உதய கம்மன்பில நினைத்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் வழக்கம்போல கொரோனா நேரத்தில் மக்கள் பயணக் கட்டுப்பாட்டுக்குள் பட்டினி கிடக்கின்ற நிலையில், எரிபொருள் விலை உயர்வு நியாயமற்றது என்றும், அதனை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் குரல்கள் எழுப்பின.

இது ஒன்றும் பெரிய விடயமே இல்லை. ஏனென்றால், விலைவாசி அதிகரிக்கும்போது எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவது வழக்கம். அதனையும் செய்யாவிட்டால் அவர்களின் இருப்பை மக்கள் அறிய வாய்ப்பும் கிடைக்காது.

இந்த முறை திரியைப் பற்றவைத்தவர் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் பொதுச்செயலாளராகப் பதவி வகிப்பவர்.

அவர், கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடன்கூடிய அறிக்கை ஒன்றில், இந்த விலை அதிகரிப்பை கண்டித்ததுடன், இந்த விலை அதிகரிப்புக்குப் பொறுப்பேற்று அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-20#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.