இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராக இருக்கும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடிக்க நடிகர் சந்தானம் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'மேயாத மான்', நடிகை அமலாபால் நடித்த 'ஆடை' ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படம் தயாராகிறது. இதில் கதையின் நாயகனாக நடிகர் சந்தானம் நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சந்தானம் நடிப்பில் அண்மையில் வெளியான 'பாரீஸ் ஜெயராஜ்' என்ற திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் நிறைவடைந்திருக்கும் 'டிக்கிலோனா', 'சர்வர்சுந்தரம்' ஆகிய இரண்டு படங்களும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ரத்னகுமார் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்திற்கு இணை கதாசிரியராக பணியாற்றினார் என்பதும், இவரது குடும்பம் முழுவதும் கொரோனாத் தொற்று பாதிப்புக்குட்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ரத்னகுமாரும் - நடிகர் சந்தானமும் கூட்டணி அமைத்திருப்பதால், இந்த படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன்பே திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.