கிளிநொச்சி மாவட்டம் அம்பாள் குளத்திலிருந்து கடந்த மார்ச் மாதம்  சடலமாக மீட்கப்பட்ட  உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் இன்று(21-06-2021) கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி அம்பாள்குளத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் குளத்தில் காணப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், குறித்த பெண் 37 வயதான காமராஜ் திலகேஸ்வரி என்றும் அவருக்கு 03 வயதில் ஒரு குழந்தை இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருந்தது.

இருந்தபோதிலும் குறித்த பெண் எவ்வாறு கொலை செய்யப்பட்டார், யாரால் கொலை செய்யப்பட்டார் போன்ற விபரங்கள் தெரியவந்திருக்கவில்லை.

கிளிநொச்சிப் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் கிளிநொச்சி முறிப்பு பகுதியைச் சேர்ந்த இருவர் இன்று கிளிநொச்சி பொலிஸாரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவர் 1980ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும் மற்றையவர் 1997 ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் நாளை அவர்கள் இருவரும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.