(நா.தனுஜா)
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசடைவை மதிப்பீடு செய்யும் பணிகளில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ஒன்றிணைந்து விசேட நிபுணர்குழுவொன்றை நியமித்திருக்கின்றன.

இந்தக் குழுவானது ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதவள உதவிப்பிரிவு, ஐக்கிய நாடுகள் சபையின் சூழல் தொடர்பான செயற்திட்டம் ஆகியவற்றின் கூட்டுத்தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டதாகும். சூழல் பாதிப்புக்கள் தொடர்பான மதிப்பீட்டுப்பணிகளை முன்னெடுக்கும் மேற்படி குழுவானது, தம்மால் கண்டறியப்படும் விடயங்களையும் பரிந்துரைகளையும் சூழலியல் பிரச்சினைகளைக் கையாள்வதற்காகக் குறுங்கால மற்றும் நீண்டகால அடிப்படைகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும்.

உலகளாவிய அனர்த்தங்கள் மற்றும் நெருக்கடிகளின் போது உதவியளிப்பதற்கான ஐ.நாவின் விசேட பிரிவைச் சேர்ந்த ஹஸன் பார்ற்றோவின் தலைமையிலான மேற்படி மதிப்பீட்டுக்குழுவிற்கு  எண்ணெய்க்கசிவு தொடர்பான ஆராய்வு மற்றும் பதில் நடவடிக்கைகள் தொடர்பான  பிரான்ஸ் தேசிய நிலையத்தில் பணியாற்றும் கலாநிதி ஸ்டெப்னி லி ப்ளொச், கடல் மாசடைவு விவகாரத்தில் தேர்ச்சிபெற்ற கலாநிதி கமிலா லா க்ரொய்க்ஸ், சூழற்பாதுகாப்பு மற்றும் ஆராய்விற்கான இத்தாலியின் தேசிய நிறுவனத்தைச் சேர்ந்த லுய்கி அல்கரோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க்கசிவு ஏற்படுகின்றதா என்பது குறித்துக் கண்காணித்தல், கடற்பிராந்தியத் தூய்மைப்படுத்தல் மற்றும் சூழல் பாதிப்புக்களை மதிப்பீடு செய்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை நிபுணர்களுக்கு அவசியமான ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மேற்படி குழு வழங்கும். கடந்த காலங்களில் சர்வதேச ரீதியில் இதனையொத்த  சம்பவங்கள் இடம்பெற்றபோது கையாளப்பட்ட நுட்பங்களை அடிப்படையாகக்கொண்டு இவ்வாறான ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த விசேட குழுவானது சூழற்பாதுகாப்புடன் தொடர்புடைய இலங்கையின் உள்ளகக்கட்டமைப்புக்களான கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, தேசிய நீரியல்வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவரகம் (நாரா), மத்திய சுகாதார அதிகாரசபை, சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து பணியாற்றும்.

மேலும், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மதிப்பீடு செய்வதில் இலங்கைக்கு  உதவி தேவைப்படும் போது ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்புடன்  இந்த விசேட குழு நியமிக்கப்பட்டிருக்கிறது என்று இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதி தோர்ஸ்றென் பார்க்ப்ரெட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.