( எம்.எப்.எம்.பஸீர்)

நாட்டில் எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் சரக்குக் கப்பல் மூழ்கியுள்ள நிலையில், அக் கப்பலால் சமுத்திர சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு நிபுணர்கள்  பகுப்பாய்வுகளை ஆரம்பித்தனர்.

சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளுடன், கப்பல் மூழ்கியுள்ள பகுதிக்கு சென்று இந்த நிபுணர்கள் குழு இந்த பகுப்பாய்வுகளை ஆரம்பித்துள்ளனர்.

 ஐக்கிய நாடுகள் சபையின் சூழல் செயற்றிட்ட இணைப்பாளர் ஒருவரையும் உள்ளடக்கிய, இரு பிரான்ஸ் நாட்டவர்கள், ஒரு இத்தாலியர் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளை பிரதி நிதித்துவம் செய்யும் நிபுணர்கள் குழாமே இந்த பகுப்பாய்வுகளை ஆரம்பித்துள்ளது.

 கப்பல் விபத்துக்களால் சமுத்திர சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மதிப்பிடுவதற்கான சிறந்த அறிவாற்றல் மிக்க நிபுணர்களே இவ்வாறு நாட்டிற்கு வருகை தந்து பகுப்பய்வுகளை ஆரம்பித்துள்ள நிலையில், சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் நிபுணர்களும் அவர்களுடன் கை கோர்த்துள்ளனர்.

இவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுசரணை வழங்குவதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.