(எம்.மனோசித்ரா)
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்திற்கமைய முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் புதன்கிழமை பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

கடந்த  ஆண்டு  ஆகஸ்ட்  மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தேசிய பட்டியல்  ஊடாக ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனத்தை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற ஒரு ஆசனத்தில் ஐ.தே.க. சார்பில் யார் பாராளுமன்றத்திற்கு செல்லப்போவது என்ற விடயம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாமலேயே இருந்தது.

எனினும் கட்சி உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரது வேண்டுகோளுக்கமைய ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் பாராளுமன்றம் செல்வார் என்று கட்சியின் செயற்குழு தீர்மானித்தது.

'பாராளுமன்றத்திற்கு செல்வதற்கான தனது இந்த நோக்கம் மக்களுக்கானது. அரசாங்கத்தை உரிய வகையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உள்ளது. அதனை செய்வதே எனது நோக்கமாகின்றது' என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.