தமிழ் அரசியல் அக ரீதியாகவும், புற ரீதியாகவும் சீரமைக்க வேண்டியுள்ளது. அக ரீதியான சீரமைப்பில் அக முரண்பாடுகளைக் களைதல், அமைப்புத் துறையை ஜனநாயக ரீதியாக கட்டியெழுப்புதல் என்பன முக்கியமாகின்றன.

புற ரீதியான சீரமைப்பில் பெரும் தேசியவாதத்தைக் கையாளல்,  சர்வதேச அரசியலைக் கையாளல், முஸ்லிம் மக்களுடனான உறவுகளைக் கையாளல்,  உலகத்தமிழ் மக்களுடனான உறவுகளைக் கையாளல், சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலக முற்போக்கு ஜனநாயக சக்திகளைக் கையாளல் என்பன முக்கியமாகின்றன.

இந்த இரண்டு விடயங்களும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. அக முரண்பாடுகளைக் கடக்காமலும் அமைப்புத் துறையைச் சரிசெய்யாமலும் புற ரீதியான விடயங்களை வினைத்திறனுடன் சீரமைக்க முடியாது.

சாதிய முரண்பாடு, பிரதேச முரண்பாடு, மத முரண்பாடு, பால் முரண்பாடு என்பன அகமுரண்பாடுகளாக உள்ளன. 

முதலாவது சாதிய முரண்பாடாகும். சாதியம் என்பது பொதுவாகவே மரபான தொழில்களை அடிப்படையாகக் கொண்டதும், பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கின்றதும், ஒருபிரிவினர் தலைமையிலான அதிகாரப்படிநிலையை வலியுறுத்துவதுமான ஒரு சமூக ஒழுங்கமைப்பாகும். 

மத ரீதியான கருத்துக்கள் சாதியத்திற்கான சித்தாந்த நியாயப்பாட்டை வழங்குகின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வு வர்க்க ஒடுக்கு முறையை இலகுவாக்குகின்றன. தேசிய விடுதலைப் போராட்டம் காரணமாகவும், சாதிய ஒடுக்கு முறைப் போராட்டங்கள் காரணமாகவும், இலவசக் கல்வி, தாய்மொழிக்கல்வி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் என்பன காரணமாகவும் இவ்வொடுக்கு முறைகள் தற்போது மிகவும் தளர்ச்சியடைந்துள்ளன. ஆனாலும் ஒடுக்கு முறைகள் முழுமையாக அற்றுப்போகவில்லை.

இரண்டாவது பிரதேச முரண்பாடாகும். தமிழ் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக தேச ஐக்கியத்தை சிதைத்து வரும் ஒரு அகக்காரணி 2 பிரதேசவாதமாகும். ‘யாழ் மைய வாதமானது’ இதன் மிகக் குறிப்பான வெளிப்பாடாகும். தமிழர் தாயகத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களைத் தாழ்வாகக் கருதுவதும், அப்பிரதேசத்தினர் மீது ஆதிக்கம் செலுத்துவதும், இதன் வெளிப்பாடாகும்.

 காலனித்துவ ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணப் பிரதேசம் மேல்நிலையாக்க வாய்ப்புக்களைப் பெற்றதும் ஏனையவை பெறாததும் இதனை ஊக்கவித்தது. இதன் எதிர் விளைவாக கடந்த காலத்தில் வன்னியிலும் மட்டக்களப்பிலும் “யாழ் அகற்றும் சங்கம்” என்ற பெயரில் அமைப்புக்கள் உருவாகியிருந்தன.

யாழ்ப்பாணப் பிரதேசத்தின் இவ்வாதிக்கப் போக்கானது யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றை மட்டும் பேசிவிட்டு வன்னி இராச்சியம், கிழக்கு இராச்சியம்,  என்பவற்றின் வரலாறுகளைத் தவிர்த்து விடுவது, வன்னி மற்றும் கிழக்குத் தமிழரின் அரசியல் பிரதிநிதிகளை தமிழ் கட்சிகளிலுள்ள யாழ் தலைமையே நிர்ணயிப்பது என்பவை மூலம் வெளிப்பட்டது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-20#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.