தொழில்நுட்ப மாற்றத்திற்காக ஈரானின் ஒரே அணு மின் நிலையம்  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரச  தொலைக்காட்சி ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

புஷெர் நகருக்கு தென் கிழக்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குறித்த அணு மின் நிலையத்தின் பணிநிறுத்தம் சனிக்கிழமை தொடக்கி, மூன்று முதல் நான்கு நாட்கள் வரை நீடிக்கும் என்று அரச மின்சார ஆற்றல் நிறுவனத்தின் அதிகாரி கோலமாலி ரக்ஷனிமெர் கூறினார்.

தெற்கு துறைமுக நகரமான புஷேரில் அமைந்துள்ள ஆலை அவசரமாக மூடப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது இதுவே முதல் முறை.

புஷெர் அணு மின் நிலையம் ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் யுரேனியத்தால் எரிபொருளாக உள்ளது. இது ஐக்கிய நாடுகளின் சர்வதேச அணுசக்தி அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது. 

இந் நிலையில் அறிவிக்கப்பட்ட பணிநிறுத்தம் குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கான கோரிக்கைக்கு சர்வதேச அணுசக்தி நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

பாரசீக வளைகுடாவின் வடக்குப் பகுதிகளின் கடற்கரையில் புஷெர் கட்டுமானம் 1970 களின் நடுப்பகுதியில் ஈரான் நாட்டின் கடைசி அரசர் மொஹமட் ரேசா ஷா பகலவி கீழ் தொடங்கியது. 

1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், ஈரான்-ஈராக் போரில் இந்த ஆலை மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டது. ரஷ்யா பின்னர் இந்த நிலையத்தை நிர்மாணித்தது.