இன்று ஏழாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதையொட்டி, அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனர்.

உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரிய கலை யோகா. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய இந்த கலை, இப்போது உலகமெங்கும் பரவி இருக்கிறது.

உடல், உள்ளம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த கலையை உலகமெங்கும் பரப்பும் நோக்கத்தில் பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்சபையில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21 ஆம்  திகதி சர்வதேச யோகா தினத்தை கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.

முதல் சர்வதேச யோகா தினம், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) 7 ஆவது சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.. இந்த நாளில் பொது இடங்களில் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் யோகா பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாகி உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள இந்தியாவின் துணைத் தூதரகம், நியூயோர்க்  டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை அனுஷ்டித்தது. 'சங்கராந்தி' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.