மன்னார் தேவன்பிட்டி மக்களுக்கான வளமான வாழ்வாதாரத்தினை இந்த வருட இறுதிக்குள் ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலட்டை பண்ணைகளை அமைக்க விரும்புகின்றவர்கள் ஒரு மாத காலத்தினுள் அமைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மன்னார், தேவன்பிட்டி கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக நேற்று(20.06.2021) கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கருத்துக்களை முன்வைத்த பிரதேச மக்கள், ஏற்றுமதி நோக்கத்திலான நண்டு, கணவாய் போன்ற தொழிலினை பெருமளவில் மேற்கொண்டு வருவதாகவும், அதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதனால், மாற்றுத் தொழிலுக்கான மீன் வலைகளைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

அதைவிட, சுமார் 65 பேர் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு ஆர்வமாக இருப்பதாவும், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறும் கேட்டுக் கொண்டனர். அதேபோன்று பல்வேறு அடிப்படை தேவைகள் தொடர்பான கோரிக்கைகளும் பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, தற்போதைய அரசியல், பொருளாதார  சவால்கள் தொடர்பாக எடுத்துக்கூறிய கடற்றொழில் அமைச்சர், மக்களுக்கான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தித் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதுவேளை, தேவன்பிட்டி கிராமத்தில் சுமார் 52 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்ந்து   வருகின்ற நிலையில், அவர்களுக்கான வாழ்வாதாரம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த மாதர் அமைப்பின் பிரதிநிதிகள், ஏனைய குடும்ப பெண்களும் பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த  திட்டம் அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.