நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று (21) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி இரவு 10 மணி வரை இந்த பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதுடன், 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது.

23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை இந்த பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

தளர்வுகளின் பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆலோசனை வழிகாட்டல்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய சுகாதார ஆலோசனை வழிகாட்டல்கள்

வீடுகளிலிருந்து அத்தியாவசிய சேவை நிமித்தம் இருவர் மாத்திரமே வெளிச்செல்ல முடியும். முச்சக்கரவண்டிகள் உள்ளிட்டவை செல்ல அனுமதி வழங்ப்பட்டுள்ளதோடு , அவற்றில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும்.

மாவட்டங்களில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம் அல்லது தளர்த்தப்படலாம்.

அத்தோடு சகல சந்தர்ப்பங்களிலும் அடிப்படை சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும்.

தனிமைப்படுத்தல்

இன்று திங்கட்கிழமை அதிகாலை 04 மணி முதல் 12 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 82 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளன.

இதேவேளை, தெமட்டகொடை - ஆராமய ஒழுங்கையின்  66 ஆவது தோட்டம் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலுள்ள 24 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 04 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அதனடிப்படையில் களுதுமெத, ஹபுகஸ்தலாவ,வீரபுர,பெரமன தெற்கு மற்றும் பஹலகொரகோய ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை 

கொவிட் -19 வைரஸ்களில்  மிகவும் அச்சுறுத்தலான டெல்டா வைரஸ் பரவுகின்ற நிலையில் நாடு திறக்கப்படுகின்றது. ஏனைய வைரஸ் தொற்றுகளை விடவும் டெல்டா மோசமான வைரஸ் என்ற காரணத்தினால் மக்களுக்கு பாதுகாப்பும் இல்லை என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் உடற்கூற்று மருத்துவ நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம தெரிவித்தார். 

நாட்டில் கொவிட் நான்காம் அலையொன்று உருவாக இதுவே பிரதான காரணமாகவும் அமையலாம் எனவும் அவர் கூறினார்.

நாடு பாதுகாப்பான சூழலில் இல்லை, இதற்கு முன்னர் இருந்த நிலையை விடவும் மோசமானா அச்சுறுத்தல் நிலையொன்றில் நாம் உள்ளோம் என்பதை சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும். டெல்டா வைரஸ் பரவலானது ஏனைய கொவிட் -19 வைரஸ் தொற்றுகளை விடவும் மோசமானதாகும்.

இதன் தாக்கங்கள் மோசமானதாக அமையும். இவ்வாறான நிலையில் நாட்டை கட்டுப்பாடுகள் இன்றி திறப்பது ஏன் என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது. மக்களின் நெருக்கடி நிலைமைகளை நாம் உணர்கின்றோம், ஆனால் அதனை விடவும் மோசமான உயிர் ஆபத்து காணப்படுகின்றது.

இந்தியாவின் நிலையே எமக்கு கண்முன் தோன்றுகின்றது, இந்தியாவில் அனாவசியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதால் இறுதியாக அவர்கள் கொடுத்த விலை அதிகமாகும் என்றே கூறுவேன். லட்சக்கணக்கான உயிர்களை பறிகொடுக்க நேர்ந்தது, இன்றும் அதன் தாக்கம் இந்தியாவில் உள்ளது.

அதே நிலையொன்று இலங்கையில் ஏற்பட்டால் சுகாதார தரப்பினரால் தாக்குப்பிடிக்க முடியாது போகும். ஏனைய வைரஸ் தொற்றுகளை விடவும் மோசமான வைரஸாக டெல்டா வைரஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே டெல்டா வைரஸ் தொற்றினால் மக்களுக்கு பாதுகாப்பும் இல்லை என்பதை சகலரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாட்டில் இதற்கு முன்னர் மூன்று அலைகள் உருவாக மக்களின் அனாவசிய செயற்பாடுகளே காரணமாகும். இப்போது நாடு திறக்கப்படுகின்ற நிலையில் நாட்டில் கொவிட் நான்காம் அலையொன்று உருவாக இது காரணமாக அமையலாம்.

எனவே நாட்டை முடக்குவதே இப்போது எடுக்கும் சரியான தீர்மானமாக இருக்கும் என்றே நாம் கருதுகின்றோம். எனவே இப்போது நாம் கடுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும். மக்கள் எப்போதுமே சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதுவே மக்களுக்கு இருக்கும் பாதுகாப்பாகும் எனவும் அவர் கூறினார்.