(ஆர்.யசி)

கொவிட் -19 வைரஸ்களில்  மிகவும் அச்சுறுத்தலான டெல்டா வைரஸ் பரவுகின்ற நிலையில் நாடு திறக்கப்படுகின்றது. ஏனைய வைரஸ் தொற்றுகளை விடவும் டெல்டா மோசமான வைரஸ் என்ற காரணத்தினால் மக்களுக்கு பாதுகாப்பும் இல்லை என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் உடற்கூற்று மருத்துவ நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம தெரிவித்தார். 

வைரஸ் பரவல் மூன்றாம் கட்டத்தில்: சமூக பரவலாக மாற்றமடையும் நிலை: தொற்றுநோய்  தடுப்பு பிரிவு எச்சரிக்கை. - Madawala News Number 1 Tamil website from  Srilanka

நாட்டில் கொவிட் நான்காம் அலையொன்று உருவாக இதுவே பிரதான காரணமாகவும் அமையலாம் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் கொவிட் 19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் இன்று நாடு திறக்கப்படுகின்ற நிலையில் இதன் பாரதூரம் குறித்து வினவிய போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

நாடு பாதுகாப்பான சூழலில் இல்லை, இதற்கு முன்னர் இருந்த நிலையை விடவும் மோசமானா அச்சுறுத்தல் நிலையொன்றில் நாம் உள்ளோம் என்பதை சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும். டெல்டா வைரஸ் பரவலானது ஏனைய கொவிட் -19 வைரஸ் தொற்றுகளை விடவும் மோசமானதாகும்.

இதன் தாக்கங்கள் மோசமானதாக அமையும். இவ்வாறான நிலையில் நாட்டை கட்டுப்பாடுகள் இன்றி திறப்பது ஏன் என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது. மக்களின் நெருக்கடி நிலைமைகளை நாம் உணர்கின்றோம், ஆனால் அதனை விடவும் மோசமான உயிர் ஆபத்து காணப்படுகின்றது.

இந்தியாவின் நிலையே எமக்கு கண்முன் தோன்றுகின்றது, இந்தியாவில் அனாவசியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதால் இறுதியாக அவர்கள் கொடுத்த விலை அதிகமாகும் என்றே கூறுவேன். லட்சக்கணக்கான உயிர்களை பறிகொடுக்க நேர்ந்தது, இன்றும் அதன் தாக்கம் இந்தியாவில் உள்ளது.

அதே நிலையொன்று இலங்கையில் ஏற்பட்டால் சுகாதார தரப்பினரால் தாக்குப்பிடிக்க முடியாது போகும். ஏனைய வைரஸ் தொற்றுகளை விடவும் மோசமான வைரஸாக டெல்டா வைரஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே டெல்டா வைரஸ் தொற்றினால் மக்களுக்கு பாதுகாப்பும் இல்லை என்பதை சகலரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாட்டில் இதற்கு முன்னர் மூன்று அலைகள் உருவாக மக்களின் அனாவசிய செயற்பாடுகளே காரணமாகும். இப்போது நாடு திறக்கப்படுகின்ற நிலையில் நாட்டில் கொவிட் நான்காம் அலையொன்று உருவாக இது காரணமாக அமையலாம்.

எனவே நாட்டை முடக்குவதே இப்போது எடுக்கும் சரியான தீர்மானமாக இருக்கும் என்றே நாம் கருதுகின்றோம். எனவே இப்போது நாம் கடுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும். மக்கள் எப்போதுமே சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதுவே மக்களுக்கு இருக்கும் பாதுகாப்பாகும் எனவும் அவர் கூறினார்.