அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள இலங்கையின் கடல்வளம்

By Gayathri

20 Jun, 2021 | 06:11 PM
image

எஸ். காயத்திரி

அனைத்து வளங்களாலும் நிறைந்த நாடாக இலங்கை காணப்பட்டாலும் இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த 30 வருடகால இன மோதல்களால் நாட்டின் வளங்கள் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில், தற்போது இலங்கையின் கடல்வளம் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.

மனிதன் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் அதனை அடுத்த சந்ததிகளுக்கு வழங்கவும் தவறுகின்றான். இவ்வாறு இலங்கை இயற்கை வளங்களான காடுகள் மற்றும் கடல்வளங்கள் நாசமாக்கப்பட்டு வருவதை நாம் அன்றாட செய்திகள் வாயிலாக அறிகின்றோம்.

இந்நிலையில், இலங்கையின் கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்திற்குள்ளாகி எரிந்து கடலில் மூழ்கிய சம்பவத்தையடுத்து இலங்கையின் கடல்வளம் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதுடன் மீன்பிடித்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த இரசாயனத் திரவியங்கள், பல வகையான அமிலங்கள் கடலில் கலந்துள்ளதுடன் பிளாஸ்ரிக் துகள்கள் பாரியளவில் கடலில் கலந்துள்ளது.

நாட்டின் கடற்கரையோரங்களில் பிளாஸ்ரிக் துகள்கள், பிளாஸ்ரிக் பொருட்கள், மருந்து பொருட்கள் உட்பட பல வகையான பொருட்கள் கரையொதுங்குவது மட்டுமன்றி இறந்த நிலையில், கடல்வாழ் உயிரினங்கள் குறிப்பாக அரிய வகை ஆமைகள், டொல்பின்கள் போன்றன தினமும் கரையொதுங்குகின்றன.

“ இலங்கையின் கடலில் கலந்துள்ள இரசான அமிலங்களின் தன்மை காரணமாக பவளப் பாறைகள், கடல் புற்கள் (சீக்ராஸ்) மற்றும் சிறிய வகை மீன்கள் அனைத்தும்  தாக்கத்திற்குள்ளாகுமாயின் அவற்றை உணவாக உட்கொள்கின்ற பெரிய மீன்களும் தாக்கத்திற்குள்ளாகும். இதனால் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் அனைத்து கடல் வாழ் உயிரினங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகும்போது இன்னும் சில வருடங்களில் நாம் பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும்” என சூழலியளாளர் ஹேமந்த விதானகே குறிப்பிடுகின்றார்.

அத்துடன் “கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலையும்  அதில் காணப்பட்ட அமிலங்கள் நிறைந்த கொள்கலன்களையும் கடலில் இருந்து அகற்றாவிடின் கடல் வாழ் உயிரினங்களின் இறப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் அபாயம் காணப்படுவதாக” கவலையுடன் தெரிவிக்கும் சூழலியலாளரான ஹேமந்த விதானகே, “இதுவரைக்கும் இலங்கையில், 4 வகையான ஆமைகளில் 35 க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்திருப்பதாகவும், 2 வகையான டொல்பின்களில் 8 க்கும் மேற்பட்டவை இறந்திருப்பதாகவும் நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இறந்துகொண்டு வருவதாகவும்” கூறுகின்றார்.

உயிரிழந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை இவ்வாறு இருக்க எது கண்ணில் படாது எத்தனை எத்தனை அரியவகை உயிரினங்கள் இறந்துள்ளனவோ! யாரறிவார். இவற்றை பாதுகாக்கத் தவறிய நிலையில் இந்த உயிரினங்களை நாம் மீண்டும் பூமியில் காணமுடியுமென்பதும் கேள்விக்குறியே.

“தீப்பிடித்து கடலில் மூழ்கிய கப்பலில் அமிலங்களைக் கொண்ட 500 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் இருந்ததாகவும் அதில் அதிகமாக அநேகரால் பேசப்பட்டது நைட்ரிக் அமிலத்தை பற்றி மாத்திரமே எனக் கூறிய சூழலியலாளரான ஹேமந்த விதானகே, இதில் நைட்ரிக் அமிலத்தைத் தவிர  சோடியம் ஹைட்ரொக்சைட் , யூரியா, எபொக்ஷி ரெக்ஷின், லித்தியம், பெட்டரி,  inorganic chemicals எனப்படும் கனிய இரசாயனங்களைக் கொண்ட  18 கொள்கலன்கள் இருந்ததாகவும் மற்றும் சல்வர் (sulfuric), ஈயம், செப்புத் தூள், ப்ரேக் எண்ணெய் மற்றும் இன்ஜின் ஒயில் போன்ற வாகனங்களுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகைகள்” இருந்ததாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு இருக்கையில், எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலைச் சூழ கறுப்பு நிறத்திலான எண்ணெய் படலங்கள் காணப்படுவதை அண்மைய நாட்களில் செய்மதி படங்கள் மூலம் வெளியாகியது. ஆனாலும் அவ்வாறு எந்த எண்ணெய்க் கசிவும் மூழ்கிய கப்பலில் இருந்து வெளியாகவில்லையென இலங்கை அறிவித்திருந்தது. இருப்பினும் கப்பல் 80 சதவீதம் வரை கடலில் மூழ்கியுள்ளதை இறுதியாக எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் காண்பிக்கின்றன.

“ கடலில் வாழும் அரிய வகை ஆமைகளும், டொல்பின்களும் உயிழிந்தமைக்குக் காரணம் நிச்சயமாக எம்வி எக்ஸ்பிரஸ் பேர் கப்பல் தீப்பிடித்தமையாலே என்பதை உறுதியாக கூறும் சூழலியலாளர் ஹேமந்த,  அமிலங்களின் விஷம் காணமாகவே இந்த உயிரினங்கள் உயிரிழக்கின்றவே தவிர வேறு எந்த காரணமும் இல்லை. கடலில் கலந்த அமிலங்களும் இரசாயனங்களும் கொண்ட பொருட்களை மனிதர்கள் தொடும்பொழுது அவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாறாக கடலில் வாழும் கடல் நீரையே உணவாகக் கொண்டு வாழும் உயிரினங்களுக்கு இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கப்பலில் இருந்து வெளியாகும் அமிலங்களே இவ்வாறு உயிரிழக்கும் உயிரினங்களுக்கு விஷமாக மாறியுள்ளது” என்பதை அவர் ஆணித்தரமாக கூறுவதுடன்  உயிரிழந்த உயிரினங்களுக்கான  உடற்கூற்று பரிசோதனைக்கான முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை எனவும் குறிப்பிடுகின்றார்.

ஜூன் 16 ஆம் திகதியை உலக ஆமைகள் தினமாக ஐ.நா. பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், அன்றையதினம் இலங்கையில் அரிய வகை ஆமைகள் உயிரிந்துழந்து கரையொதுங்கியமை பெரும் அதிர்வலைகளையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது. உலகில் வாழும் 07 வகை கடல் ஆமைகளில் 05 வகையான கடல் ஆமைகள்  இலங்கையின் கடல் பரப்பில் உயிர் வாழுகின்றன.

பாணந்துறை கடற்கரையில் 50 கிலோ கிராம் எடை கொண்ட ஆமையொன்றும், களுத்துறை கடற்கரையில் கடல் ஆமையொன்றும்  மற்றும் பேருவளை கடற்கரையில் 40 கிலோ கிராம் எடையுடைய கடல் ஆமையொன்றும், கொஸ்கொட - மஹபில்ல கடற்கரையிலும், அம்பலாங்கொடை ரந்தொம்பே கடற்கரையிலும், மொறகொல்ல கடற்கரையிலும் மற்றும் மன்னார் போன்ற பல கடற்கரையோரங்களில் இவ்வாறு அரியவகை கடல் ஆமைகள் தொடர்ச்சியாக உயிழந்து கரையொதுங்குவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதேவேளை, யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை சுருவில் கடற்கரைபகுதியில் 32 அடி நீளம் கொண்ட திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியது. மன்னார் நடுக்குடா பகுதியிலும் அரிய வகை மீன் இறந்த நிலையில் கரையொதுங்கியது.  இவ்வாறு நாளாந்தம் கடல்வாழ் உயிரினங்களின் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றன.

“ கடல்வாழ் உயிரினங்களின் உயிரிழப்புக்களை நிறுத்துவதற்கு முடிந்தளவு சீக்கிரமாக கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்களை அகற்ற வேண்டும். இதனை அகற்றுவதற்கு ஏன் இவ்வாறு காலம் தாழ்த்துகிறார்கள் என்பது புரியவில்லை. மற்றும் விபத்திற்குள்ளான கப்பலையும் உடனடியாக வெளியில் எடுக்க முயற்சி செய்ய வேண்டும். காரணம் கப்பலில் எண்ணெய் வகைகள் காணப்படுகின்றன. எண்ணைய்களை முன்கூட்டியே அகற்றுவது நல்லது” என ஹேமந்த கூறுகிறார்.

“கப்பலில் இருந்த பிளாஸ்ரிக் துகள்களை அகற்றுவதென்பது நடைமுறைக்கு சாத்தியமான விடயமல்ல. இதனை வினைத்திறன் மிக்க நடவடிக்கைகளைக் கொண்டு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சில பிளாஸ்ரிக் துகள்கள் இலங்கையின் ஆழ் கடல் பகுதிக்குள் சென்றுள்ளது. இவை பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறான பிளாஸ்ரிக் துகள்கள் இப்போது இலங்கையின் மன்னார் வரைக்கும்  சென்றுள்ளது. இந்த பிளாஸ்ரிக் துகள்கள் நாட்கள் செல்லும் பட்சத்தில் பல மைல் தூரம் செல்லக் கூடும். ஒரு வருடமோ அல்லது இருவருடத்திற்குள்ளேயோ இந்தியா வரைக்கும் இந்த பிளாஸ்ரிக் துகள்கள் அடித்துச்செல்லப்படலாம் எனத் தெரிவிக்கும் சூழலியலாளர், அதுமட்டுமல்லாமல் ஆள்கடலுக்குள் செல்லும் பிளாஸ்ரிக் துகள்கள் ஒரு வாரம் அல்லது இரு வாரங்களுக்குள் பாசி வகைகளில் ஒட்டும். அவ்வாறு பாசியுடன் ஒட்டும் பிளாஸ்ரிக் துகள்களை உணவுகள் என மீனினங்கள் தவறாக கருதி அதனை உண்ண நேரிடுவதால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” எனவும் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக இறந்து வருகின்ற கடல் வாழ் உயிரினங்களின் உடல்கள் உடற்கூற்று பரிசோனைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றன. இந்நிலையில் 19 ஆம் திகதி ( 19-06-2021 )சனிக்கிழமை மாத்திரம் நாட்டின் பல பகுதிகளில் 11 கடல் ஆமைகளும் 03 டொல்பின்களும் இறந்த நிலையில் கரையொதுங்கின.

இதேவேளை எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீபற்றி விபத்துக்குள்ளாகிய சம்பவத்தையடுத்து ஒரு வாரத்திற்குள் கடல் ஆமையொன்று உயிரிந்த நிலையில் கரையொதுங்கியது. மே 18 ஆம் திகதி முதல் ஜுன் 19 திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் 70 க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

இலங்கைக்கு இயற்கை தந்த பல வரப்பிரசாதங்கள் மனித செயற்பாடுகள் மூலமும் தான்தோற்றித்தனமான நடவடிக்கைகள் மூலமும் இழக்கப்படுகின்றது. காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள நிலையை விட எதிர்காலத்தில் இவ்வாறான  மனித நடவடிக்கையால் ஏற்படும் அனர்த்தங்களை குறைப்பதற்கு மனிதன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் இருக்கின்றன என்று எண்ணாது, வெறும் பேச்சளவில் வளங்களை பாதுகாப்போம்! சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்! என்று கூறுவதை நிறுத்தி, இன்றிலிருந்தும் செயலில் இறங்க ஒவ்வொரு நபரும் திடசங்கற்பட் பூணவேண்டும்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்