(செ.தேன்மொழி)

திருகோணமலை - கப்பல்துறை பகுதியில் தந்தையின் வாள் வெட்டுக்கு இலக்கான 6 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

குடும்ப தகறாரின் காரணமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் தாத்தா மற்றும் பாட்டி படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சீனக்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பில் சீனக்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவிக்கையில்,

சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் நேற்று சனிக்கிழமை குடும்ப தகராரின் காரணமாக இடம்பெற்ற இந்த மோதல் தொடர்பில்  கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தின் போது தக்ஷன் என்ற 6 மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்த குழந்தையின் தாத்தாவான 47 வயதுடை பெர்னாண்டோ குமார் மற்றும் பாட்டியாக 43 வயதுடைய முத்துமாரி என்பவரும் படுகாயமடைந்துள்ளனர்.

கப்பல் துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய லக்ஷிக்கா என்ற சிறுமி 21 வயதுடைய லன்ஷான் என்ற இளைஞனை திருமணம் செய்துள்ளதுடன் , லக்ஷிகாவிற்கு திருமணம் செய்யவதற்கான வயது பூர்த்தி அடையாததன் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். எனினும் அவர்களுக்கு 6 மாதமுடைய ஆண் குழந்தையொன்று உள்ளது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று லக்ஷிக்காவின் கணவர் அவரது வீட்டுக்கு வந்த போது, குழந்தை அழுது கொண்டிருப்பதால் அதற்கு பாலூட்டுமாறு தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கு அவசியமில்லை என லக்ஷிகாவின் தந்தை கூறியமையால் கோபமடைந்த இளைஞன் அவரை வாளால் தாக்கியுள்ளார்.

இதன்போது லக்ஷிகாவின் தந்தையிடமிருந்த 6 மாத குழந்தை வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளது.  இளைஞன் வாளால் தாக்கியதை தடுக்க முயன்ற லக்ஷிகாவின் தாயாரின் கையையும் அவர் வெட்டியுள்ளார்.

இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்கான குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் சீனக்குடா பொலிஸார் தப்பிச் சென்றுள்ள சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுத்துள்ளனர்.