பெல்ஜிய நகரமான ஆண்ட்வெர்பில் பாடசாலை கட்டுமானத் தளமொன்று ஓரளவு இடிந்து விழுந்ததில் ஐந்து கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த அனர்த்தத்தால் மூவர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் சனிக்கிழமை பிற்பகல் மேலும் இருவரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ஆண்ட்வெர்ப் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

இறந்தவர்களில் இருவர் போர்ச்சுகல் மற்றும் ருமேனியாவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளதுடன், இறந்த மற்ற தொழிலாளர்களின் தேசியம் அடையாளம் காணப்படவில்லை.

வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

கட்டிடம் இன்னும் கட்டுமானத்தில் இருந்ததால், விபத்து நடந்தபோது எந்த மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கட்டுமான நிறுவனமான டெமோகோவின் துணை ஒப்பந்தக்காரர்கள் என்று பெல்கா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.