(ஆர்.ராம்)
நாட்டில் கொரோனா பரவலால் மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கையில், எதிர்க்கட்சியினர் அரசியல் சிற்றின்பத்தினைப் பெறுவதற்காகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருகின்றனர் என பொதுஜனபெரமுனவின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார். 

எதிரணியினர் அமைச்சர் உதய கம்மன்பில மீது ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேணையை கொண்டுவருகின்றமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

நாட்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதில் அரசாங்கம் அதிகளவு கவனத்துடன் செயற்பட்டு வருகின்றது. அவ்வாறானதொரு நிலையிலும் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருகின்றார்கள்.

இது அவர்களின் அரசியல் பலவீனத்தினைக் காண்பிக்கின்றது. குறிப்பாக, இத்தகைய நெருக்கடியான காலத்திலுத் அரசியல் இலாபத்தினைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காகவும், அதன் மூலம் அரசியல் சிற்றின்பத்தை அனுபவிப்பதற்குமே அவர்கள் முனைகின்றார்கள். 

பொதுஜனபெரமுன இந்த விடயத்தினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விரைவில் எமது கட்சியின் தலைவர் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கூடி ஆராயும். அதன் பின்னர் எதிர்க்கட்சிக்கு தக்க பதிலடி வழங்குவோம் என்றார்.