52 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அனுமதியினை காலி நீதவான் ஹர்ஷனா கெகுனவெலா பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு வழங்கினார்.

பொலிஸ் தலைமையகத்தின் , திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மூன்று வாரகாலம், விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காலி , ஹிக்கடுவை, ஹாங்கம மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுள் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து 52 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , சந்தேக நபர்கள் போதைப் பொருள் கடத்தலுக்காக பயன்படுத்திய இரு வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்யப்பட்டன.

அது மாத்திரமின்றி பொலிஸ் அதிகாரியும் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.