எம்.எம்.சில்வெஸ்டர்

இலங்கை வங்கிக் கிளையொன்றின் ஏ.டி.எம். இயந்திரத்தின் ஊடாக பணம் பெற்றுக்கொள்வதற்காக சென்ற இளைஞரொருவருக்கு அந்த இயந்திரத்தில் அகப்பட்டிருந்த 95 ஆயிரம் ரூபா பணத்தொகை கிடைக்கவே, அதனை வங்கி அதிகாரியிடம் கையளித்த சம்பவமொன்று அண்மையில் பதிவானது. 

இவ்வாறு பணத்தை வங்கி அதிகாரிக்கு செலுத்தியவர், பொத்திவெலகொட பிரதேசத்தில் வசித்துவரும் எம்.ஜே. லசித் இந்திக்க எனப்படும் 27 வயதுடைய இளைஞராவார்.

இந்த சம்பவம் குறித்த தெரியவந்துள்ளதாவது,

கடந்த 16 ஆம் திகதி இரவு 8 மணியளவில் காலி மாவட்டத்தின் நியகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தல்கஸ்வல எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளையின் ஏ.டி.எம். இன் ஊடாக பணம் பெற்றுக்கொள்வதற்காக குறித்த இளைஞர் சென்றுள்ளார். 

அப்போது ஏ.டி.எம். இயந்திரத்தை இயக்கச் செய்தபோது, அதனுள் அகப்பட்டிருந்த பணத்தொகை இயந்திரத்திலிருந்து வெளியே வந்தன. இந்த சந்தர்ப்பத்தின்போது அங்கே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒருவரும் கடமையில் இருக்கவில்லை.

ஏ.டி.எம். இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள ஏதேனும் கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்பதற்காக இலங்கை வங்கியின் துரித அழைப்பு சேவை இலக்கத்துக்கு குறித்த இளைஞர் தொடர்புகொண்டு நடந்தவற்றை தெரியப்படுத்தியுள்ளார்.

பணத்தொகையை கணக்கிட்டுக்கொள்ளுமாறும் வங்கிப் பிரிவினர் அறிவுரை விடுத்ததையடுத்து, தனது நண்பரொவரின்  உதவியுடன் கையடக்கத் தொலைபேசியினூடாக பணத் தொகையை கணக்கிடுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.

கணக்கிட்டுப்பார்க்கையில் அதன் பெறுமதி 95 ஆயிரம் ரூபா எனவும் வங்கிப் பிரிவுக்கு குறித்த இளைஞன் தெரியப்படுத்தியுள்ளார். 

அதன் பின்னர் அந்த இளைஞனின் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை குறித்துக்கொண்ட வங்கிப் பிரிவினர், நாளை தினத்தில், அதாவது 17 ஆம் திகதி காலையில் தல்கஸ்வல வங்கிக் கிளைக்கு வருகைதந்து ஒப்படைக்குமாறு குறித்த இளைஞருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து வீடு திரும்பி அந்த இளைஞன், பணத்தை பாதுகாப்பாக வைத்து மறுநாள் காலை தல்கஸ்வலவிலுள்ள இலங்கை வங்கிக் கிளைக்கு சென்று, அங்கு கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு விடயத்தை கூறியதையடுத்து, இளைஞரிடம் வந்த வங்கியின் அதிகாரியொருவர் குறித்த 95 ஆயிரம் ரூபா பணத்தொகையை பெற்றுக்கொண்டார்.

‘இந்த பணத்தை எனக்கு சொந்தமாக்கியிருக்க முடியும். எனினும், மனிதாபிமானம் என்பது அதுவல்ல’ என்று இன் முகத்துடன் அந்த இளைஞர் கூறியுள்ளார்.