(எம்.மனோசித்ரா)
பால்மா, எரிவாயு, சீமெந்து மற்றும் கோழி இறைச்சி என்பவற்றின் விலைகளை தற்போது அதிகரிக்க அனுமதி வழங்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

 அத்தோடு எரிவாயுவிலை தொடர்பில் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு  உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த உப குழுவின் தீர்மானமே எரிபொருள் விலை தொடர்பான இறுதி தீர்மானமாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 அவர் மேலும் கூறுகையில் ,

பால்மா, எரிவாயு, சீமெந்து மற்றும் கோழி இறைச்சி என்பவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகின்ற போதிலும் , இவை எவற்றின் விலையையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

உலகலாவிய ரீதியில் காணப்படுகின்ற கொவிட் பரவல் நிலைமையின் காரணமாக உள்நாட்டு மற்றும் சர்வதே ரீதியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், குறித்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளன.

 அத்தோடு சீமெந்து மற்றும் எரிபொருள் விலைகளில் மக்களுக்கு ஏதேனும் சலுகைகைள ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, இவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு  ஏதேனும் நிவாரணத்தை வழங்க முடியுமா என்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதேவேளை பால்மா , சீனி, சோளம், அரிசி உள்ளிட்டவற்றை களஞ்சியப்படுத்தும் நிறுவனங்கள் அவற்றை பதிவு செய்வது தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அதற்கான கால வரையறை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தது. எனவே குறித்த காலப்பகுதியில் பதிவு செய்யத்தவறிய நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.