(எம்.மனோசித்ரா)

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

 சுகாதாரப் மருத்துவ அதிகாரி பிரிவுகள் அடிப்படையிலான வகைப்படுத்தலின் கீழ் பதிவான தொற்றாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் வரைபடத்தையும் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது. 

இந்த தரவுகள் இம்மாதம் 6 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 14 நாட்களுக்குள் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்திற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் மாத்திரமே தொற்றாளர்கள் இனங்காணப்படாதவையாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் முசலி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு, திருகோணமலை மாவட்டத்தில் சேருவில சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு, அநுராதபுரத்தில் பலுகஸ்வெவ சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு, புத்தளம் மாவட்டத்தில் பல்லம சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் மற்றும் செங்கலடி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள், அம்பாறை மாவட்டத்தில் லஹூகல சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு ஆகியவை குறைந்த அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரிவுகளும் அதிக அபாயம் மிக்கவையாக சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.