நா.தனுஜா

நாட்டில் டெல்டா வகை வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் சமூகத்திலிருந்து இனங்காணபட்டிருக்கும் நிலையில், தற்போது பின்பற்றப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கல் கொள்கையில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வைத்திய நிபுணர் ரஜீவ் மேனன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் பரவி வரும் டெல்டா வகை வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கொழும்பில் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வைத்திய நிபுணர் ரஜீவ் மேனன் மேலும் கூறியிருப்பதாவது,

கொழும்பில் டெல்டா வகை வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் சமூகத்திலிருந்து கண்டறியப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கல் கொள்கையில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். 

அத்தோடு மாற்றம் ஏற்படுத்தப்பட்டு புதிதாக நிர்ணயிக்கப்படும் தடுப்பூசி வழங்கல் கொள்கையின் அமுலாக்கமானது கொழும்பிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அதுமாத்திரமன்றி இயலுமானவரை விரைவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். 

தற்போது எதிர்வினைகளைக் காண்பிப்பதை விடவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்கூட்டியே தயார் நிலையில் இருப்பதே அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஏற்கனவே தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு திரிபடைந்த டெல்டா வகை  வைரஸ் தொற்று ஏற்படும் பட்சத்தில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதிலிருந்து தடுப்பூசிகள் எந்தளவிற்குப் பாதுகாப்பை வழங்குகின்றன என்ற தரவுகள் பிரிட்டனால் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தத் தரவுகளின்படி பைஸர் முதல்கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவருக்கு டெல்டா வகை வைரஸ் தொற்று ஏற்படுமாயின், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதிலிருந்து 94 சதவீதம் பாதுகாப்பைப் பெறமுடியும்.

அஸ்ராசெனேகா முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றவரெனின் 71 சதவீதம் பாதுகாப்பைப் பெறலாம். அதேவேளை பைஸர் இரண்டாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றவர் 96 சதவீதமும் அஸ்ராசெனேகா இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றவர் 92 சதவீதமும் பாதுகாப்பைப் பெறமுடியும் (டெல்டா வைரஸ் தொற்று ஏற்படும் பட்சத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு எதிரான பாதுகாப்பு) என்று வைத்தியநிபுணர் ரஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.