வீ.பிரியதர்சன்

கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பது போல பயறு அளவிலான சிறிய பிளாஸ்டிக் துகள்கள் சுற்றுச் சூழலை பாதிப்படையச் செய்துள்ளது மாத்திரமன்றி கடலில் வாழும் உயிரினங்கள் மற்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்பவற்றையும் புரட்டிப்போட்டுள்ளது.

இவற்றுக்கு மத்தியில் பல வருட காலமாகப் பேசப்படாத ஒரு விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அது தான் Nurdle எனப்படும் பிளாஸ்டிக் துகள்கள்.

ஆம் Nurdle எனப்படுவது பிளாஸ்டிக் உற்பத்தியின் மூலப்பொருள் என்பது நாம் எவருமே அறிந்திராத விடயம்.

இந்த பிளாஸ்டிக் துகள்களினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து அறிந்தவர்கள்  ஒரு சிலரே உள்ளனர்.

தற்பொழுது இந்த விடயம் பேசுபொருளாக மாறியமைக்கு இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தமே காரணமாகின்றது.

இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்து எரிந்து  சுமார்  இரண்டு வாரங்களில் கடலில் மூழ்கியது.

X-Press Pearl accident might become worst environmental disaster for

பேர்ள் கப்பலில் ஏற்றிவரப்பட்ட தொன் கணக்கான Nurdle எனப்படும் பிளாஸ்டிக் துகள்கள் கடலுடன் சங்கமமாகின.

இது இலங்கையின் கடல் சூழலுக்கு மாத்திரமல்ல ஏனைய நாடுகளின் கடல் சூழலுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் நீண்டகால அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

பிளாஸ்டிக் துகள்கள் சிறு சிறு முத்துக்களைப்போன்று உருண்டையாக காணப்படுவதால் அவை இலகுவில் வேகமாகவும் வெகுதூரத்திற்கும் கடல் நீரில் அடித்துச் செல்லும் தன்மைகொண்டன.

இலங்கையின் களுத்துறை முதல் நீர்கொழும்பின் கொச்சிக்கடை வரையான கடற்கரையோரங்களில் கரையொதுங்கிய 1000 சுமார் மெற்றிக் தொன் கப்பல் கழிவுப் பொருட்கள் கொள்கலன்களில் சேமிக்கப்பட்டுள்ளன.

Sri Lankan firefighters extinguish blaze on container ship

இலங்கையின் கடற்கரைகளில் இந்த பிளாஸ்டிக் துகள்கள் கரையொதுங்குவது மாத்திரமல்லாது நாளடைவில் ஏனைய நாடுகளின் கடற்கரைகளிலும் கடலின் அடிப்படுக்கைகளிலும் இவை ஒதுங்கும் வாய்ப்புள்ள்ளது.

நாளுக்குநாள் இவ்வாறு பிளாஸ்டிக் துகள்கள் கரையொதுங்குவது மட்டுமல்லாது கடல்வாழ் உயிரினங்களும் இறந்து கரையொதுங்குகின்றன.

Nurdle என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் துகள்கள் என்றால் என்ன ? இவை எங்கிருந்து வருகின்றன ? இது எதற்கு பயன்படுத்தப்படுகின்றது ? இவை எவ்வாறு சூழலை மாசடையச் செய்கின்றன ? போன்ற பல்வேறு கேள்விகள் எம் மனதில் எழும். 

Sri Lanka launches probe after burning ship pollutes beaches | Sri Lanka  News | Al Jazeera

எல்லா விதமான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் இவையே மூலப்பொருளாக பயன்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பிளாஸ்டிக்கின் முதல் வடிவமாக Nurdles ஐ நாம் கருதலாம்.

இதன் உற்பத்தி சுழற்சியை பார்ப்போம் ஆனால், எரிபொருள் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் மசகு  எண்ணெய்யை அல்லது வாயுவை உற்பத்தி செய்வதற்கு முன்னோடியாக Nurdle எனப்படும் இவை உருவாகின்றன.

ஆயினும் Nurdles இனால் நாம் பயனை பெறுவது மட்டுமல்லாமல்  பாதிப்பையும் பெறுகின்றோம். அதாவது இவை உற்பத்தியின் போதும் போக்குவரத்தின் போதும் அல்லது அனர்த்தமொன்றின் போதும் சிதறிச்செல்கின்றன.

இவை பின்னர் மனிதனுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறுகின்றன.

கடல் நீரினில் இவை மிதக்கும் பொழுது மீனின் முட்டைகளை போன்றே இவை மிதக்கின்றன. இதனால் மீன்களும் பறவைகளும் ஆமைகளும் இவற்றை உணவாக உட்கொள்கின்றன. இதனால் அவை உயிரிழக்க  நேரிடுகின்றது.

இவை  கடலின் மேற்பரப்பில் மிதக்கும் பொழுது கடல் நீரில் உள்ள ரசாயன அமிலங்களை உறிஞ்சிக் கொள்கின்றன . இதனால் காலப்போக்கில் nurdles நச்சுப்  பதார்த்தமாக மாற்றமடைகின்றது.

இதனை உட்கொண்ட நீண்ட நாட்களின் பின்னரே இதன் விளைவுகளை நாம் அளவிட முடியும். ஆகவே இதன் பாதிப்பு குறுகிய நாட்களுக்குள் அடங்கி விடாது.  பல ஆண்டுகள் நீளும்.

Nurdles சுற்றுச்சூழலுடன் கலக்கும் பட்சத்தில் இவற்றை தூய்மையாக்க சுமார் ஆயிரம்  ஆண்டுகள் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றே கூற முடியும்.

இவை  தொன் கணக்கில் உற்பத்தி  செய்யப்படுகின்றன. இவற்றில் இருந்து  ஆண்டுதோறும் 250,000 தொன்  Nurdles வீணாக கடலினுள் கலக்கின்றது. இவ்வாறு வீணாகும் Nurdles ஆல் 10,000 கொள்கலன்களை நிரப்ப முடியும்.

ஆயினும் இவற்றை தடுப்பதற்கான வழிகள் இல்லாது மனிதன் தடுமாறுகின்றான். உற்பத்தியின் போதும் போக்குவரத்தின் வீணாகும் பிளாஸ்டிக் துகள்களை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் தற்பொழுது வரை கண்டறியப்படவில்லை.

கடந்த 2017 ஆம் ஆண்டு பலத்த சூறாவளி காரணமாக தென்னாபிரிக்காவின் டேர்பன்  துறைமுகத்தில் ஏற்பட்ட புயலால் இரண்டு கொள்கலன்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் அதிலிருந்த Nurdles எனப்படும் பிளாஸ்டிக் துகள்கள் சூறாவளி காற்றில் பறந்து கடலுக்குள் கலந்தன.

காற்றில் அடித்துச் செல்லப்பட்ட இந்த துகள்கள்  சுமார் 1800 கிலோ மீற்றர் தூரம் வரை கடலில் அடித்துச் செல்லப்பட்டன.

தென்னாபிரிக்காவின் டேர்பனில் இருந்து கேப்டவுன் வரை பரவிச் சென்றது மட்டுமல்லாமல் தென்னாபிரிக்கா முதல் அவுஸ்திரேலிய கடற்பரப்பு வரை இந்த பிளாஸ்டிக் துகள்கள் பரவலடைந்து சென்றுள்ளன.

அதன் பாதிப்பு தற்போதும் காணப்படுகின்ற நிலையில் இலங்கையின் கொழும்பு துறைமுக கடற்பரப்பில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலில் கலந்த Nurdles எனப்படும் பிளாஸ்டிக் துகள்களின் தாக்கம் எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்குமோ தெரியாது !

கடற்கரைகளில் சிதறிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் துகள்களை அகற்றுவதற்கு பாரியளவிலான சுத்திகரிப்பு செயற்திட்டங்களே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

என்ன நேர்ந்தாலும் இன்று வரை  nurdles சூழலுடன் கலந்த வண்ணமே காணப்படுகின்றன..