நா.தனுஜா
எரிபொருள் விலை அதிகரிப்புத் தொடர்பான தீர்மானத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கும் அமைச்சரவைக்கும் உள்ளது. அவ்வாறிருக்கையில் ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு எதிர்க்கட்சி கோரியிருக்க வேண்டும்.
மாறாக தற்போது பிளவுபட்டிருக்கும் ஆளுந்தரப்பை மீண்டும் ஒன்றிணைக்கும் வகையிலான நம்பிக்கையில்லாப் பிரேரணையையே எதிர்க்கட்சி கொண்டுவந்திருக்கிறது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இதுகுறித்து காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், அதில் மேலும் கூறியிருப்பதாவது,
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் கம்மன்பில அவரது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
நாட்டிலேற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம் தொடர்பான பிரச்சினைக்கு அவர்கள் கூறுகின்ற தீர்வு உரிய அமைச்சர் பதவி விலகுவது மாத்திரமேயாகும்.
நாட்டு மக்களால் சமாளிக்க முடியாதளவிற்கு அன்றாட வாழ்க்கைச் செலவு பெருமளவிற்கு அதிகரித்திருக்கிறது. தற்போதைய எரிபொருள் விலையதிகரிப்பினால் அந்த வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிக்கப் போகின்றது. எனவே எரிபொருள் விலையைக் குறைத்து நாட்டுமக்களுக்குத் தீர்வை வழங்குமாறு வலியுறுத்தியே எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரவேண்டும்.
எனினும் இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் பிரேரணையில் அந்தக் காரணி குறிப்பிடப்படவில்லை.
அடுத்ததாக இந்த அரசாங்கம் பல்வேறு பிரிவுகளாகப் பிளவடைந்திருக்கின்றது. ஒரு தரப்பினர் கம்மன்பிலவிற்கு எதிராகக் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அதேவேளை இவற்றை எதிர்கொள்ளமுடியாமல் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார். எனவே மற்றொரு அணியினர் பசில் ராஜபக்ஷவை நாட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்று கூறுகின்றனர்.
இவ்வாறு முரண்பட்டு, பிளவடைந்திருக்கும் அரசாங்கத்தை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளையே ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்திருக்கின்றது. எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணையை வெற்றிக்கொள்வதற்காக ஆளுந்தரப்பைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைவார்கள்.
எனவே இவர்கள் ராஜபக்ஷ தரப்பிற்கு ஆதரவாக செயற்படுகின்றனரா என்ற கேள்வி எழுகின்றது. இல்லாவிட்டால் இவ்வாறான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதன் ஊடாக ஆளுந்தரப்பிலுள்ள அனைவரும் ஒன்றுபடுவார்கள் என்ற அரசியல் புரிதல் இல்லாத தலைமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையா என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.
அடுத்ததாக எரிபொருள்விலையை அதிகரிக்கும் இந்தத் தீர்மானமானது, வாழ்க்கைச்செலவுகள் தொடர்பான அமைச்சரவை உப குழுவின் ஆலோசனைக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக்குழுவில் ஜனாதிபதியும் பிரதமரும் அங்கம் வகிக்கிறார்கள்.
அதுமாத்திரமன்றி இந்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு அங்கீகாரமளிக்கப்பட்டிருக்கிறது. எனவே இது உதய கம்மன்பில தனித்து மேற்கொண்ட தீர்மானமல்ல. மாறாக இந்தத் தீர்மானம் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய கடமை அரசாங்கத்திற்கும் அமைச்சரவைக்கும் இருக்கின்றது. ஆகவே ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தியே நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.
ஆனால் இங்கு ராஜபக்ஷாக்கள் மீதான அச்சத்தின் காரணமாகவோ அல்லது ராஜபக்ஷாக்களுடன் செய்திருக்கும் டீல் காரணமாகவோ அல்லது தமது குறைபாடுகளை மறைக்கும் நோக்கில் ராஜபக்ஷாக்களுக்கு மறைமுகமான உதவியாளர்களாக செயற்படும் காரணத்தினாலோ அல்லது அறியாமையின் காரணமாகவோ தான் பிளவுபட்டிருக்கும் ஆளுந்தரப்பை மீண்டும் ஒன்றுசேர்க்கும் வகையிலான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவந்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM