(எம்.மனோசித்ரா)

முழு உலகையும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ள கொவிட் ஆட்கொல்லி வைரஸானது மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதோடு மாத்திரமின்றி , அதற்கும் அப்பால் எவ்வித பேதமும் இன்றி சகலரையும் வெவ்வேறுதுறைகளிலும் பாதிப்படையச் செய்துள்ளது.

இவ்வாறு மனித சமூகம் எதிர்கொண்டுள்ள சவால்களில் மிக முக்கியத்துவமுடைய ஒன்று கல்வி. பாடசாலைகளுக்குச் சென்று கற்றலை தொடர முடியாத நிலையை தோற்றுவித்துள்ள கொவிட் வைரஸ் பரவலால் இணையவழி கற்றல் (ழடெiநெ ளவரனலiபெ) பிரபலமடைந்துள்ளது.

No description available.

இணையவழி கற்றல் பிரபலமடைந்துள்ளது என்பதை விட இணையவழி கற்றல் என்ற சொல் மாத்திரமே பிரபலமடைந்துள்ளது என்பதே பொறுத்தமானது. இலங்கையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சுமார் 60 இற்கும் குறைவான நாட்கள் மாத்திரமே பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

எனினும் இதில் மேல் மாகாண மாணவர்களை உள்வாங்க முடியாது. இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் கல்வி அமைச்சு கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தரம் ஆகிய இரு தேசிய பரீட்சைகளை நடத்தி முடித்திருக்கிறது.

பரீட்சைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருந்தாலும் அதன் பெறுபேறுகள் வெற்றியளிக்கவில்லை என்பதே பல தரப்பினரதும் குற்றச்சாட்டாக இருக்கிறது.

50 000 பரீட்ச்சாத்திகள் உயர்தர பரீட்சைக்கு தோற்றவில்லையா?

இணையவழி கல்வி தொடர்பில் எதிர்மறையான கருத்துக்களே முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் , 2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் தோற்றவிருந்த 50 000 பரீட்சாத்திகளும் , சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருந்த 85 000 பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க பாரதூரமானதொரு குற்றச்சாட்டை கல்வி அமைச்சின் மீது முன்வைத்திருக்கின்றார். கொவிட் தாக்கத்தினால் கற்பித்தல் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படாமையே இதற்கான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் தொற்று பரீட்சைகளில் தாக்கம் செலுத்தவில்லை

இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசனுடன் தொடர்பு கொண்டு வினவிய போது அவர் இவ்வாறு பதிலளித்தார் :

கொவிட் தொற்று மாணவர்களில் கற்றல் செயற்பாடுகளில் ஓரளவு தாக்கம் செலுத்தியிருந்த போதிலும் , அதன் காரணமாக பரீட்சைக்கு தோற்றிய பரீட்சாத்திகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது என்று கூற முடியாது.

பரீட்சைக்கு விண்ணப்பித்த சகலரும் அவற்றுக்கு தோற்றியே ஆக வேண்டும். உயர்தரம் மற்றும் சாதாரண தரம் ஆகிய இரண்டிலுமே இந்த சிக்கல்கள் ஏற்படவில்லை.

கொவிட் தாக்கத்தினால் பரீட்சை பெறுபேறுகளில் சிறு வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் , பெரும்பாலான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

கடந்த வருடங்களை விட கடந்த ஆண்டு பரீட்சைகளில் சித்தியடைந்த வீதம் அதிகரித்துள்ளது. இரண்டாவது முறையாகவும் , தனியார் பரீட்சாத்திகளாகவும் பரீட்சைக்கு விண்ணப்பித்த சிலர் பரீட்சைக்கு தோற்றாமல் இருக்கும் வாய்ப்புக்கள் அதிகம்.

எனினும் பாடசாலை ஊடாக தோற்றும் பரீட்சாத்திகளையே நாம் பிரதானமாக அவதானிக்கின்றோம். அவ்வாறானவர்களில் பாரிய வீழ்ச்சியெதுவும் அவதானிக்கப்படவில்லை.

No description available.

அத்தோடு தொலைக்காட்சி அலைவரிசைகள் ஊடாக மூன்றாம் வகுப்பு முதல் சகல வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆகஸ்ட் மாதம் முதல் பல புதிய முறைமைகளையும் அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது என்று பிரதி ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன் தெரிவித்தார்.

60 வீதமான மாணவர்கள் எவ்விதத்திலும் கல்வியை பெறாமலுள்ளனர்

அரச தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற போதிலும் நேரடியாக மாணவர்களுடன் தொடர்பைப் பேணும் ஆசிரியர்கள் பெரும் அதிருப்தியிலேயே உள்ளனர். இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில் ,

No description available.

இணையவழி கற்பித்தலை முன்னெடுப்பதாக கல்வி அமைச்சு கூறினாலும் இலங்கையில் நூற்றுக்கு 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே கணனி அறிவுடையவர்களாகக் காணப்படுகின்றனர்.

குறிப்பாக மலையகத்தில் கணினி அறிவுடைய மாணவர்களின் எண்ணிக்கை 12 வீதத்தை விடவும் குறைவாகும். வடக்கு மற்றும் கிழக்கில் பின்தங்கிய பிரதேசங்களிலும் இதே நிலைமையே காணப்படுகிறது. இவ்வாறான நிலைமையில் தற்போது 60 வீதமான மாணவர்கள் எவ்விதத்திலும் கல்வியைப் பெறாமல் விடுமுறை நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர்.

கல்வி செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் இன்மையால் மாணவர்கள் கல்வியில் சமத்துவத்தை இழந்துள்ளனர். மாணவர்கள் மாத்திரமின்றி இணைவழியூடாக கற்பிக்கும் ஆசிரியர்களும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அவர்கள் தங்களின் சொந்த செலவிலேயே கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு கல்வி அமைச்சு தீர்க்கமானதொரு தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைகள் மற்றும் சாதாரண தர பரீட்சைகள் நிறைவடைந்துள்ளன. உயர்தர பெறுபேறுகள் வெளியாகியுள்ள போதிலும் அந்த மாணவர்களின் எதிர்காலத்தில் என்ன ஆகப் போகிறது என்பது இன்றும் ஸ்திரமற்றதாகவுள்ளது.

அதே போன்று சாதாரணதரத்தில் நடைமுறைப்பரீட்சையை நடத்த முடியாமையால் அந்த பெறுபேறுகள் வெளியாகமலுள்ளன. இதில் தாமதம் ஏற்படுவது மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் என்று குறிப்பிட்டார்.

முறையான திட்டமிடலுடன் சவாலுக்கு மத்தியில் பயணிக்க வேண்டும்

எவ்வாறிருப்பினும் இவ்வாறு குறை நிறைகளைக் கூறிக்கொண்டிருப்பதை விட கொவிட் சவாலுக்கு மத்தியில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பதிலேயே சகரதும் வெற்றி தங்கியுள்ளது.

இத்தாலி போன்ற நாடுகளில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் போது முறையான திட்டமிடல் காணப்பட்டது. தடுப்பூசி வழங்கும் முன்னுரமைப்பட்டியலில் ஆசிரியர்களும் உள்வாங்கப்பட்டனர். தற்போது சகல ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு அந்நாட்டில் கல்வி செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறான முறைமைகளை துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுடன் ஏன் பின்பற்ற முடியாது? இணைய வழி கல்வி என்பதற்கு பதிலாக அரச தொலைகாட்சி மற்றும் வானொலி சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி குறிப்பிட்டவொரு நேரத்திற்கு கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற திட்டமிடலின் கீழ் இதற்கான நடைமுறைகளை முன்னெடுக்க முடியும் என்றும் பலரால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்றரை வருட காலம் தாமதித்து போதும். இனியேனும் துரிதமாக இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.