(இராஜதுரை ஹஷான்)  
கொழும்பு துறைமுகத்தின்  கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி , மூழ்கிக் கொண்டிருக்கும்  பேர்ல் கப்பல் விவகாரம் சட்ட நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதால், இறந்த நிலையில் கடற்கரையோரங்களில் கரையொதுங்கிய கடல்வாழ் உயிரினங்களின்  உடற்கூறு  பரிசோதனை அறிக்கையை தற்போது பகிரங்கப்படுத்த முடியாது. வெகுவிரைவில் அனைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்படும் என சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு  துறைமுகத்தின்  கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம். வி. கப்பலினால் கடல் வளத்திற்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவடையவில்லை என்பது  இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

 இந்த நெருக்கடியான சூழ்நிலையினை முகாமைத்துவம் செய்ய துறைசார் மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கப்பல் நிறுவனத்திடமிருந்து முதற்கட்ட நட்டஈட்டை பெற்றுக் கொள்ளும் சட்ட நடவடிக்கை  துரிதகரமாக  மேற்கொள்ளப்பட்டுள்ளன..

 கப்பல் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து பெருமளவிலான கடல்வாழ் உயிரினங்ள் குறிப்பாக கடலாமைகள் இறந்து  கரையொதுங்கியுள்ளன. இதனை மிகவும் துரதிஷ்டவசமான  சம்பவமாகவே கருத வேண்டும்.  

கப்பலில் ஏற்பட்ட விபத்து, அதனால் கடல் வளத்திற்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு, இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டமிடல்கள் என அனைத்து விடயங்களும் முறையாக ஆவணப்படுத்தப்படுகிறது சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் அவை பகிரங்கப்படுத்தப்படும் என்றார்.