முல்லைத்தீவில்  சட்டவிரோத தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் கடற்றொழில் நீரியல்வள திணைக்களமும் கடற்படையும் வேடிக்கை பார்ப்பதாகவும் மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

முல்லைத்தீவு  மாவட்டத்தின் சாலை  முதல் கொக்கிளாய் முகத்துவாரம் வரையான கடற்பரப்பில் அண்மை நாட்களாக சட்டவிரோத தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் சட்டவிரோத  தொழிலாளர்களால் தமது வலைகள் அறுக்கப்படுவதாகவும் கடலில் திருவிழா போன்று வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் இடம்பெறுவதாகவும் திணைக்களமும் கடற்படையும் வேடிக்கை பார்ப்பதாகவும் இதனை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

குறிப்பாக தாம் கடலில் இறங்கி தொழில் செய்யவே அச்சப்படுவதாகவும் அங்கு நங்கூரமிட்டு வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடியில் ஈடுபடும் புல்மோட்டை மீனவர்கள் தமது வலைகளை வெட்டி விடுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனை விட மாலை வேளையில் கடலில் திருவிழா சோடனை போன்று வெளிச்சம் பாச்சி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபடும் போதும் கடற்படையினர் கடற்கரையில் இருந்து வேடிக்கை பார்ப்பதாகவும்  கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினரும் கண்டும் காணாமலும் இருப்பதாகவும் அமைச்சர் அவர்கள் உடனடியாக கட்டுப்படுத்துமாறு பணிப்புரை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக இல்லை என மீனவர்கள்  குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்வாறான சட்டவிரோத தொழில்களை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் தாம் வாழ்வாதாரம் இழந்து நிற்கதியாகவேண்டிய நிலை வரும் எனவும் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.