அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) விசேட கூட்டத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தீர்மானித்துள்ளார்.

குழு உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் கோப் குழுவினால் 09 ஆவது பாராளுமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள 02 அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்படவுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்படவேண்டிய நிறுவனங்கள் யாவை என்பது குறித்தும் இக்கூட்டத்தில் தீர்மானிக்க எதிர்பார்த்திருப்பதாக அக்குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

கொவிட் 19 சவாலுக்கு மத்தியில் கோப் குழுவின் கூட்டங்களை ஒன்லைன் முறைமையில் (online)  ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது. 

இதற்கமைய சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கணக்காளர் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரை மாத்திரம் குழுவின் முன்னிலையில் அழைப்பது மற்றும் ஏனையவர்களை ஒன்லைன் முறைமையின் கீழ் இணைத்துக் கொள்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளது.