(எம்.மனோசித்ரா)

அமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடுகிறீர்களா? அல்லது வர்த்தமானியை இரத்து செய்து விலையை குறைக்கப் போகிறீர்களா? என்று ஆளுந்தரப்பிடம் கேள்வியெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் , அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையை மீண்டும் குறைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் இலக்காகும் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் பொருளாதார ரீதியில் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஒரு வேளை உணவை மாத்திரம் உண்டு வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறிருக்க இணையவழி கல்வி முறைமையால் முழுமையான கல்வியைப் பெற முடியாமல் மாணவர்கள் மறுபுறம் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசாங்கம் இணையவழியூடாக மதுபானத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அரசாங்கம் இதுபோன்று முட்டாள் தனமான தீர்மானங்களை எடுக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம் என்றாலும், அவ்வாறான தீர்மானங்களுக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டியது எதிர்க்கட்சியின் கடமையாகும். இவ்வாறான நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பும் மக்களுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது.

வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதற்காகவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனினும் அதற்கு மாறாக எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருக்க வேண்டுமே தவிர , அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கில் செயற்பட்டிருக்கக் கூடாது.

எனவேதான் ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளது.

இவருக்கு எதிராக கருத்து வெளியிட்ட ஆளுந்தரப்பு பின்வரிசை உறுப்பினர்களிடம் கேள்வியொன்றை எழுப்ப விரும்புகின்றோம். அமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுகிறீர்களா? அல்லது வர்த்தமானியை இரத்து செய்து விலையை குறைக்கப் போகிறீர்களா?

உதய கம்மன்பில சரியானவரா அல்லது சாகர காரியவசம் சரியானவரா என்பது எமது பிரச்சினையல்ல. அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையை மீண்டும் குறைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.