நாட்டின் புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சீனா மூன்று விண்வெளி வீரர்களை சுற்றுப் பாதைக்கு அனுப்பியுள்ளது.

நீ ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹாங்க்போ ஆகிய மூன்று வீரர்களும் பூமிக்கு மேலே 380 கி.மீ (236 மைல்) தொலைவில் உள்ள தியான்ஹே விண்வெளி நிலையத்தில் மூன்று மாதங்கள் செலவிட உள்ளனர்.

மூன்று வீரர்களையும் தாங்கிய ஷென்ஜோ -12 என்ற விண்கலம் சுமார் 01:22 GMT மணிக்கு வடமேற்கு சீனாவின் ஜியுகுவான் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து அதன் இலக்கை நோக்கி புறப்பட்டது.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா, பிரேசில், இத்தாலி   உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து உள்ளன. 

பூமியிலிருந்து 418 கி.மீ தூரத்தில் இந்த விண்வெளி  ஆய்வு மையம் அமைந்து உள்ளது. விண்வெளி மையத்தின் கட்டுமான பணிக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை 3 வீரர்கள் சென்று திரும்புகின்றனர்.

சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலவுகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் அங்குள்ள மனித வாழ்க்கைக்கு ஏதுவான சூழல் தொடர்பான ஆய்வுகள் அங்கு நடந்து வருகிறது.  

அமெரிக்காவின் நாசா மட்டுமல்லாமல் உலகின் பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சீன விண்வெளி வீரர்கள் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனை அடுத்து சீனா தற்போது தனியாக  தியாங்காங் என்று  விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. 

சீனா முன்னர் விண்வெளி நிலையத்தின் தியான்ஹே கோர் கேபின் தொகுதியை ஏப்ரல் 29 அன்று லாங் மார்ச் -5 பி கேரியர் ரொக்கெட் வழியாகவும், தியான்ஜோ -2 விண்கலத்தை லாங் மார்ச் -7 வழியாக மே 29 அன்று அனுப்பியது.

இதன் தொடர்ச்சியாக ஒரு மாதம் கழித்து அதாவது மே 29 ஆம் திகதியன்று விண்வெளி நிலையத்திற்கான எரிபொருள், விண்வெளி உடைகள், உணவு பொருட்களுடன் தியான்ஜோ -2 என்ற விண்கலத்தை சீனா விண்ணுக்கு அனுப்பியது. 

இந்த நிலையில், விண்வெளி நிலையத்தில் பணியாற்றுவதற்காக 3 விண்வெளி வீரர்களை அனுப்பி வைக்க போவதாக சீனா அறிவித்திருந்தது. 

இதற்காக கடந்த சில மாதங்களாகவே விண்வெளி வீரர்களுக்கு என தனியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் அவர்கள் மூவரும் ஷென்ஜோ -12 என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி விழாவாக இன்று நடைபெற்றது. 

ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளில் சீனா விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது இதுவே முதல்முறையாகும்.