மன்னாரில் ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுகின்ற 10 நபர்கள் உட்பட 15 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 572 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனை முடிவுகளின் படி நேற்றைய தினம் புதன் கிழமை (16.06.2021) மேலும் 15 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 5 நபர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் எமில் நகர், சாந்திபுரம் மற்றும் தாராபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

மேலும், ஆடைத் தொழிற்சாலையில் ஒவ்வொரு வாரமும் மேற்கொள்ளப்படுகின்ற அன்ரிஜன் பரிசோதனைகளின் போது 70 அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அவற்றில் 10 நபர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள் சின்னக்கடை, சாந்திபுரம், எமில் நகர், பேசாலை , விடத்தல் தீவு, பரப்புக்கடந்தான் மற்றும் பண்டிவிருச்சான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் 6 பேர் பெண்களாகவும் 4 பேர் ஆண்களாகவும் உள்ளனர்.பெண்கள் தாராபுரத்தில் அமைந்துள்ள இடை நிலை சிகிச்சை நிலையத்திற்கும், ஆண்கள் வவுனியா இடை நிலை சிகிச்சை நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

 தற்போது வரை 65 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 572 நபர்களும் இவ்வருடம் 555 நபர்களும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தாராபுரத்தில் அமைந்துள்ள இடை நிலை சிகிச்சை நிலையத்தில் இது வரை 311 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் 239 நபர்கள் சிகிச்சைகளை நிறைவு செய்து தமது வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இவர்களில் 45 பேர் மன்னார் மாவட்டத்தைச்  சேர்ந்தவர்கள். அவர்களில் 44 நபர்கள் சிகிச்சைகளை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

மேலும், மன்னார் மாவட்டத்தில் சமூகத்தில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துரித செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். மக்கள்  சுகாதார வழி முறைகளை உரிய முறையில் கடை பிடித்து தொற்றிற்கு உள்ளாகாது உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

மேலும் மருதமடு அன்னையினுடைய ஆடி திருவிழா எதிர் வரும் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக  உள்ளது.

இம் முறை அரசினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக ஒரே நேரத்தில் திருப்பலியில் கலந்து கொள்ள 30 நபர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என்றார்.