நடிகரும், ஒளிப்பதிவாளருமான ஷமன் மித்ரு கொரோனாத் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பிரிவில் படித்து தங்கப்பதக்கம் வென்றவரான ஷமன் மித்ரு, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவிடம் உதவியாளராக இணைந்து பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, தமிழ், கன்னட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். 

ஸ்ரீகாந்த் நடிப்பில் தயாராகிவரும் 'எதிரி என் 3 ' என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த இவர், அந்த தருணத்தில் 'தொரட்டி' என்ற படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்தார். பல்வேறு தடைகளை கடந்து அப்படத்தை வெளியிட்டு, வெற்றி பெறவும் செய்தார். பல விருதுகளையும் 'தொரட்டி' திரைப்படம் பெற்றது. அடுத்த பட தயாரிப்பு குறித்து நண்பர்களுடன் கலந்துரையாடல் செய்து வந்த இவர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சுமார் ஒரு மாத காலம் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.

43 வயதாகும் இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், மோக்சா என்ற ஐந்து வயதில் பெண் பிள்ளையும் உள்ளனர். கொரோனாத் தொற்றிற்கு தமிழ் திரையுலகில் பலரும் பலியாகி வருவது தொடர்கதையாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.