தலைமன்னார் கடல்பரப்பில் கரையொதுங்கிய இந்திய மீனவரின் சடலம் மன்னாரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 தலைமன்னார் கடல்பரப்பில் அமைந்துள்ள தீடையென்னும் மண் திட்டியில் ஒதுங்கியிருந்த ஆணின் சடலம்  காணாமல்போன இந்திய மீனவர் என அடையாளம் காணப்பட்ட போதும் உறவினர்கள் இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முடியாத காரணத்தால் அவ் சடலம் மன்னாரிலே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தியா இராமேஸ்வரம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இந்திய இலுவைப்படகு மீனவர்கள் நான்கு பேர்  இந்திய இலுவைப் படகில் கடந்த மாதம் 29ஆம் திகதி மீன் பிடிப்பதற்காக வந்தபோது கடலில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி (04.12.2015) வெள்ளிக் கிழமை ஒரு சடலம் தலைமன்னார் பகுதி கடற்பரப்பிலுள்ள தீடை என்று அழைக்கப்படும் முதலாம் மண்திட்டியில் கரை ஒதுங்கியிருப்பதாக அவ் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களால்  பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தலைமன்னார் பொலிஸார் தலைமன்னார் கடற்படையினரின் உதவியுடன் இவ் சடலத்தை அன்றே மீட்டு வந்து அடையாளம் காண்பதற்காக மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்திருந்தனர்.

கடந்த 12 தினங்களாக மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இவ் சடலத்தை அடையாளம் காண்பதற்காக யாழ் இந்திய தூதரகத்தினூடாக இந்தியா இராமேஸ்வரப் பகுதிக்கு  தெரிவிக்கப்பட்டிருந்தது.

கண்டுபிடிக்கப்பட்ட இவ் சடலம் காணாமல்போன நான்கு இந்திய மீனவர்களில் ஒருவர் என்றும் இவர் இராமநாதபுரம் சல்லிமலை கிராமத்தைச் சேர்ந்த யாகீர் உஷைன் (வயது 40) என்றும் அடையாளம் காண்பிக்கப்பட்டபோதும் இவ் சடலத்தை இவரின் நாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலையில் இருந்தமையால் மன்னாரிலே நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இறந்த மீனவர் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவராக இருந்தமையால் இஸ்லாம் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என கேட்கப்பட்டதைத் தொடர்ந்து இதன்படி உப்புக்குளம் பள்ளி பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் இவரின் சடலத்தை இஸ்லாமிய மதச் சடங்கின்படி நேற்று மாலை மன்னார் வைத்தியசாலையிலிருந்து மன்னார் உப்புக்குளம் பள்ளிக்கு எடுத்துவரப்பட்டு பின் உப்புக்குளம் மையவாடியில் அப்பகுதி முஸ்லிம் மக்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் நல்லடக்கத்தின்போது யாழ் இந்திய தூதரக அதிகாரி மற்றும் பொலிசாரின் முன்னிலையிலே இவ் ஐனாசா இடம்பெற்றதும்  குறிப்பிடத்தக்கது.