(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான உரிமையைப் பெறுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்றும், ஷானி அபேசேகரவை விடுதலை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கிறது. இவற்றின் ஊடாக இலங்கை மக்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்கு சர்வதேச சக்திகளில் தங்கியிருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் கூறமுற்படுகின்றதா? என்று மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இவ்விடுதலை தொடர்பில் பிமல் ரத்நாயக்க அவரது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சடலங்களை அடக்கம் செய்வதற்கான உரிமையைப் பெறவேண்டுமெனில், இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்படவேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர்; சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர பிணையில் விடுதலை செய்யப்படவேண்டுமெனில், ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டாய ராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச சக்திகளின் குரல்களுக்கு மாத்திரமே செவிசாய்க்கப்போகின்றதா? என்று அப்பதிவின் ஊடாகக் கேள்வி எழுப்பியிருக்கும் பிமல் ரத்நாயக்க, இலங்கைப் பிரஜைகளின் குரல்களையும் கதறல்களையும் உங்களால் செவிமடுக்கமுடியாதா? என்றும் அரசாங்கத்திடம் வினவியிருக்கிறார்.

இவற்றின் ஊடாக இலங்கை மக்கள் அவர்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச சக்திகளில் தங்கியிருக்கவேண்டும் என்று கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் கூறமுற்படுகின்றதா? என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.