எம்.நேசமணி  

சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையின் அரசியல் வரலாற்றில்  ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகளே மாறி மாறி இலங்கையை ஆட்சிசெய்து வந்தன.

அந்த வரலாற்று சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும்  ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றின் முடிவுகள் அமைந்ததை யாவரும் அறிவர்.

அதனடிப்படையில் முதல் முறையாக புதிய கட்சியொன்று ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றியதுடன் எதிர்கட்சியாகவும் புதிய கட்சியொன்று பாராளுமன்றில் செயற்பட்டமை விசேட அம்சமாகும்.


ஆளும் கட்சியாக பொதுஜன பெரமுனவும் பிரதான எதிர்க் கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளன. முதற் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தையேனும் பெறாமல் படுதோல்வியடைந்துள்ள நிலையில் அக்கட்சிக்கு தேசியப் பட்டியல் மூலம் ஆசனமொன்று  கிடைக்கப்பெற்றுள்ளது.

மற்றுமொரு பாரம்பரிய கட்சியான ஸ்ரீ லங்கா  சுதந்திரக் கட்சி அதன் சின்னத்தில் ஒரேயொரு ஆசனத்தையும் பொதுஜன பெரமுனவுடன் கூட்டுச் சேர்ந்து மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டதன் மூலம் சில ஆசனங்களையுமே பெற்றுக்கொண்டது. அதனடிப்படையில் மொட்டுக் கட்சியான பொதுஜன பெரமுன குறுகிய காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றி அசத்தியது.


உள்ளூராட்சி சபைத்தேர்தலில் தொடங்கி ஆட்சி அரியணையை கைப்பற்றும் வரை அந்தக் கட்சி முன்னெடுத்த போராட்டங்கள் மற்றும் பிரசாரங்கள் பெரும்பான்னை சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனாலேயே ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் அதனை தொடர்ந்து வந்த பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வந்ததும் குறிப்பிடத்தக்கது.

   

இவ்வாறு குறுகிய காலத்துக்குள் உச்சத்தை எட்டிப்பிடித்த அக்கட்சிக்குள் தற்போது உட்பூசல்களும் கருத்து முரண்பாடுகளும் ஊற்றெடுக்கத் தொடங்கியுள்ளன. கொரோனா அலையோடு அந்த உட்பூசல்கள் அவ்வப்போது அள்ளுண்டு போனாலும் அவை மீண்டும் மீண்டும் உருவாகிய வண்ணமேயுள்ளன.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிடுவதென்பது அரசியலில் வழமைதான் என்றாலும் இன்று ஆளும் கட்சிக்குள்ளே‍யே அந்த எதிர்ப்பலை எதிரொலிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்ற விமல் வீரவன்ச போன்றோரே  இன்று அந்த ‍எதிர்ப்பலையின் பின்னால் இருக்கின்றார்கள் என்பதுதன்  கவனிக்கப்படவேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவுடன் வீதியில் இறங்கி வீராப்பாய் பேசி சிங்கள மக்களை அணிதிரட்டி, மைத்திரி - ரணில் ஆட்சியை வெறுக்கச் செய்து புதிய ஆட்சியை மலரச் செய்ததில் விமல் வீரவன்ச போன்றோருக்கு பெரும் பங்குண்டு. அவர்களுக்கு பெளத்த பிக்குமார்களின் பேராதரவும் கிடைத்ததென்பதை மறுக்கவும் முடியாது.

இவ்விதமாக சிங்கள மக்களின் பேராதரவினால்  அமோக வெற்றிபெற்றதாக தனது பதவியேற்பு விழாவின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். அந்தளவிற்கு சிங்கள மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்தனர்.

இந்த அரசாங்கத்தின் அமோக வெற்றிக்கு காரணமாயிருந்தவர்களே இன்று அரசாங்கத்தை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். அதையும் தாண்டி அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகள் பொதுஜன பெரமுன தரப்பினருடன் முரண்பட்டு வருவதையும் காணமுடிகிறது. அதன் உச்சக்கட்டமாகவே அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை அமைந்துள்ளது.

எரிபொருள் விலையுயர்வு தொடர்பான அறிவிப்பையடுத்து  பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில ஆகிய இருவருக்குமிடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றன.

அதாவது உதய கம்மன்பில அமைச்சுப்பதவியினை இராஜினாமா செய்யவேண்டும் என சாகர காரியவசம் தெரிவித்ததை அடுத்தே அவ்விருவருக்குமிடையில் கருத்து மோதல்கள் உக்கிரமடையத் தொடங்கின.

அதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலர், சந்திப்பொன்றை நடத்தினர்.

“அந்த சந்திப்பையடுத்து எரிபொருள் விலையேற்றம், அமைச்சர் கம்மன்பிலவின் தனித் தீர்மானமல்ல. அது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பொதுத் தீர்மானம் எனவே அமைச்சர் கம்மன்பிலவின் மீது மாத்திரம் பொறுப்பை சுமத்த முடியாது” என தெரிவித்த அவர்கள் இவ்வாறான கருத்து முரண்பாடுகளால் அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை இழக்கப்படும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எட்டு பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இணைந்தே இவ்வாறானதொரு அறிக்கையினை வெளியிட்டார்கள். இந்த அறிக்கை ஒரு சாதாரண அறிக்கைதான் என்றாலும் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்கள் மேலோங்கி வரும் இந்த தருணத்தில்  அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் எட்டு பேர் ஒன்று சேர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதை  அவ்வளவு சாதாரணமாகக் கருதக்கூடாது.

ஏற்கனவே அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச பொதுஜன பெரமுனவின் தலைமை பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கவேண்டும் என்ற கருத்தை வெளியிட்டு அது அரசியல் அரங்கில் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியிருந்தது.


அதாவது பொதுஜன பெரமுனவின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கான அதிகாரம் விமலுக்கு இல்லை என கூறப்பட்டதுடன் அவருக்கு ஏதிராக கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

அதனையடுத்து  விமல் வீரவன்ச மெளனம் காக்கத்தொடங்கினார் பின்னர் அவரது இல்லத்தில் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் அடிக்கடி சந்தித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.

பின்னர் பொதுஜன பெரமுனவிற்குள் பல்வேறு சமரச முயற்சிகளும் இடம்பெற்றதாகவும் சொல்லப்பட்டது. எது எப்படியோ  ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் குழப்பங்கள் தொடர்வதை பல சம்பவங்கள் அவ்வப்போது எடுத்துக்காட்டின.அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் கடந்த மே தினத்தில் தனித்தனியாக ‍பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்துவதற்கு திட்டமிட்டு வந்தன. அதனையடுத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு தனித்தனியாக கூட்டங்களை நடத்தாது ஒன்றாக நடத்துமாறு ஆலோசனை கூறப்பட்டதாகவும் அக்ககூட்டத்தை  விமல் வீரவண்ச போன்ற இன்னும் சில கட்சித் தலைவர்கள் நிராகரித்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகின இவை அனைத்தும் அரசாங்கத்திற்குள் காணப்பட்ட முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக்காட்டின.

நாட்டில் காணப்பட்ட கொவிட் பரவல் நிலைமை காரணமாக மேதினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் அரசாங்கத்துக்குள் காணப்பட்ட குழப்பங்கள் பெரிதாக வெளிவராமல் போயின. அரசாங்கத்துக்குள் காணப்பட்ட குழப்பங்கள் வெளிப்படக்கூடாது என்பதற்காக அரசாங்கமே திட்டமிட்டு மேதின கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதித்ததாகவும் சொல்லப்படுகிறது.அன்று இந்த அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தியவர்களே இன்று அதிருப்தியடைந்து விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். பாமர மக்கள் முதல் படித்தவர்கள் எனப் பலரும் இந்த பட்டியலில் அடங்குகின்றனர். இவையனைத்தும் இந்த அரசாங்கத்தின் செல்வாக்கு குறைந்து வருவதையே எடுத்துக் காட்டுகிறது. 


சரியான தலைமைத்துவமின்றி இவ்வரசாங்கம் முன்னெடுக்கும் மோசமான ஆட்சியை எதிர்த்து பொதுமக்கள் விரைவில் வீதியில் இறங்கி போராடுவார்கள் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறு ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புக்கள் எகிறத்தொடங்கியுள்ளன. சாதாரண பிரஜைகள் மற்றும் பிக்குகள் என பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மறுபுறத்தில்  கொரோனாவின் கோரத்தாண்டவமும் மக்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலையச் செய்துள்ளது.

இவ்விதமான பல்வேறு சவால்களையெல்லாம்  சமாளித்து மீண்டும் மக்கள் மனங்களில் மொட்டு மலருமா? அல்லது முறிந்து உதிருமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.